நாகர்கோவிலில் திருமண விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியில் இரு வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மணப்பெண் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மறவன்குடியிருப்பு பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மணமகள் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மதுபோதையில் குத்தாட்டம் போட்டதுடன் மணமகனின் உறவுக்கார பெண்கள் மீது மோதியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணமகன் வீட்டார் குத்தாட்டம் போட்ட இளைஞர்களை அப்புறப்படுத்த முயன்றபோது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் பிளாஸ்டிக் இருக்கைகள் அடித்து உடைக்கப்பட்டன. இந்த பதற்றமான சூழலில் மணப்பெண் மயக்கமடைந்தார். அவரை மணமகன் தனது தோளில் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையிலும், தொடர்ந்து பெண் வீட்டை சேர்ந்தவர்கள் என்பதால் மணமகன் வீட்டை சேர்ந்தவர்கள் என்ன சொன்னாலும் கேட்டு கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம் என சிலர் சத்தமிட்டது அங்கு இன்னும் பிரச்னையை அதிகபப்டுத்தியது . இரு வீட்டாருக்கு இடையே நடைபெற்ற இந்த மோதலில் 6 பெண்கள் உட்பட 10 க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த மோதல் சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமண மண்டபத்தில் இவ்வளவு பிரச்சனைகளும் நடந்துக்கொண்டிருந்த அதே வேளையில், கேட்டரிங் ஆட்களோ என்ன நடந்தாலும் பரவாயில்லை என நினைத்து புரோட்டா அடித்து தங்கள் வேலைகளை மும்முரமாக செய்துக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா









