சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘பராசக்தி’. சுதா கொங்கரா இயக்கும் இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட பராசக்தி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால் படம் குறித்த தேதிக்கு வெளியாகுமா என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று பராசக்தி படத்திற்கு U/A சான்றிதழை மத்திய தணிக்கை வாரியம் வழங்கி உள்ளது. இதையடுத்து பராசக்தி திரைப்படம் நாளை திட்டமிட்டபடி வெளியாகிறது.
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படம் குறித்து பேட்டி அளித்துள்ளார். அவர் பேசியதாவது,
”பட வெளியீட்டின் போது ஏற்படுகிற அழுத்தம் எனது 4, 5 படங்களுக்கும் இருந்தது.. இந்த படத்தில் தான் அது எல்லோருக்கும் தெரிந்தது. என்னுடைய பொங்கல் படங்கள் எல்லாமே பிரச்சினையுடன் தான் வெளியானது. இனிமேல் பொங்கல் வெளியீட்டின்போது கதையைவிட மற்றவற்றை யோசிக்க வேண்டும். சென்சாரில் கட் செய்த காட்சிகளை விட மற்ற காட்சிகளில் சொல்ல வந்த கருத்துக்களை சொல்லிவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
பராசக்தி 1960களில் நடந்த மாணவர்கள் போராட்டம் பற்றிய கதை. எந்தவித அரசியல் சார்பும் கிடையாது. எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவும் எதிர்ப்பும் கிடையாது. 2மணி 40 நிமிடங்கள் ஓடுகிறது. இலங்கையில் படப்பிடிப்பு நடந்த இடத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. இன்னும் 5 நாட்கள் இருந்திருந்தால் ரசிகர்களே படத்தை எடுத்து எடிட் செய்து அனுப்பியிருப்பார்கள். வசனங்கள் மற்றும் உடைகள் அந்த காலத்தில் உள்ளதாக இருக்க வேண்டும் அதே நேரத்தில் இப்போது உள்ளவர்களுக்கும் புரிய வேண்டும் என்பது கடினமாக இருந்தது.
அடுத்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க இருந்தேன். அவர் ரஜினிகாந்த் படத்தை இயக்க சென்றதால் அந்த படம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் கதையும் எனது கதையும் வேறு. அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறேன். அந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. சூர்யா நடிக்க இருந்த புறநானூறு படத்தின் கதைதான் பராசக்தி படம்.
குழந்தைகளை கவரும் காட்சிகளும் பராசக்தி படத்தில் இருக்கிறது. ஆனாலும் இது இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கான படம். எனக்கு எல்லா ஜானரிலும் படம் நடிக்க ஆசை. ரஜினி, கமல் போல் நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமா என்று தெரியாது. கிடைக்கும் வாய்ப்புகளில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க விரும்புகிறேன்.
ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது எதிர்பாராத ஒன்று. எனக்கு போட்டியில் உடன்பாடு இல்லை போட்டியில் உடன்பாடு இருந்தால் நான் பாக்ஸராகவோ, அத்லெட்டாகவோ ஆகியிருப்பேன். விஜய் படம் எப்போது வெளியானாலும் அன்றைய தினம் கொண்டாட்டம் தான்.
ஜனநாயகன் சென்சார் பிரச்சினை நீதிமன்றத்தில் இருப்பதால் அதுகுறித்து கருத்து தெரிவிக்க கூடாது. பராசக்தி படம் தணிக்கைக்கு சென்றபோது எதிர்பாராத இடங்களில் கட் கொடுத்தார்கள். தணிக்கையின்போது என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாது. படம்பார்க்கும் உறுப்பினர்களின் கருத்தை பொறுத்து மாறுபடும். இந்த சிக்கல்களை தீர்க்க படத்தை 2 மாதங்கள் முன்னபாகவே தணிக்கைக்கு அனுப்புவது நல்லது. அதை தயாரிப்பாளார்கள் மற்றும் படக்குழு தரப்பில் உறுதி செய்யப்பட வேண்டும்.
அமரன் படத்தில் எல்லோருக்கும் தேசிய கிடைத்தால் மகிழ்ச்சி. அந்த வருடத்தில் வெவ்வேறு மொழிகளில் என்னென்ன படங்கள் வெளியாகி இருக்கிறது என்று தெரியாது. அமரன் படக்குழு மொத்தத்திற்கும் விருது கிடைத்தால் சந்தோஷம்தான்.
முகம் தெரியாத நபர்களின் விமர்சனங்களை நான் கண்டுகொள்ளவதில்லை. என் நெருங்கிய நண்பர்களிடம் மட்டுமே பேசுகிறேன்.. குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுகிறேன். சமூக வலைத்தளங்களை திறந்தாலே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரை நம்மை விமர்சிப்பதாக தோன்றுகிறது. அதனை கண்டுகொள்ளாமல் எனது வேலையில் கவனம் செலுத்துகிறேன்.













