தேர்வு எளிமையாக இருந்தது- மாணவர்கள் மகிழ்ச்சி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கிய நிலையில், தமிழ் தேர்வு மிகவும் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நேரடி பொதுத் தேர்வு…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கிய நிலையில், தமிழ் தேர்வு மிகவும் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நேரடி பொதுத் தேர்வு நடத்தப்படாமல் இருந்த நிலையில், இன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். மொத்தம் 3 ஆயிரத்து 119 மையங்களில் தேர்வு நடைபெற்றது. கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் தேர்வெழுதினர்.

முதல் நாள் தேர்வுக்கு பின்னர் பேட்டியளித்த மாணவர்கள், தேர்வு மிகவும் எளிமையாக இருந்ததாக தெரிவித்தனர். கொரோனா பரவல் காரணமாக 10வது மற்றும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வை கடந்த 2 ஆண்டுகளாக எழுத முடியாமல் போனதால் வருத்தத்தில் இருந்ததாகவும், தற்போது முதன்முறையாக பொதுத்தேர்வை எழுதியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர்கள் கூறினர்.

முன்னதாக, சென்னை தேர்வு மையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் ஆய்வு செய்தார். சாந்தோம் ரபேல் பள்ளியில் ஆய்வு செய்த அவர், தேர்வு ஏற்பாடுகள், செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினார்.

பின்னர் பேட்டியளித்த அவர், இந்த பொதுத்தேர்வின் முடிவுகள் ஜுலை மாதத்திற்குள் வெளியாகும் எனவும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும், இலங்கை அகதி மாணவர்களை பள்ளிகளில் சேர்ப்பது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.