பட்டின பிரவேசத்திற்கான தடை தொடர வேண்டும் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தழிழ்நாடு அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டினபிரவேசம் மற்றும் பிரம்ம ரதம் என்ற பெயரில் ஆதீன கர்த்தாக்களை மனிதர்கள் பல்லக்கில் தூக்கி செல்லும் நடைமுறை நவீன காலத்திற்கு ஒவ்வாததாகும். இறை நம்பிக்கை என்கிற பெயரில் பெரும் மடங்களை நிர்வகிக்கும் ஆதீன கர்த்தாக்கள் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கு இவ்வாறு பல்லக்கில் அமர்ந்து கொண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஊர்வலம் வருவதும், வழியில் உள்ள பக்தர்களுக்கு பணம் மற்றும் திருநீறு வழங்கி வருவதை நடைமுறையில் பின்பற்றி வந்தனர்.
ஆனால் காலப்போக்கில் தமிழ்நாட்டில் உள்ள பல மடங்களில் இந்த நடைமுறை கைவிடப்பட்டுள்ளது. தற்போது பட்டினப் பிரவேசம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ள தருமபுர ஆதீனத்திலும் இந்த நடைமுறை சில ஆண்டுகளுக்கு முன்னரே நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தற்போது புதிதாக பொறுப்பிற்கு வந்துள்ள தருமபுர ஆதீனம் இதனை தூசித்தட்டி மீண்டும் செயல்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ள சூழ்நிலையில் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, இதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தெய்வ நம்பிக்கை என்பது வேறு, மனிதனை மனிதன் சுமப்பது என்பது வேறு. இரண்டையும் வித்தியாசப்படுத்தி பார்க்க வேண்டும். நவீன விஞ்ஞான காலத்தில் மனிதர்களை இழிவு செய்யும் இதுபோன்ற நடைமுறைகளை தொடர்வது பழமைவாத சிந்தனைப் போக்காகும். பல ஆண்டுகளாக இது நடைமுறையில் உள்ளது என்று சொல்லி இதனை நியாயப்படுத்துவது பொருத்தமற்றது ஆகும். எனவே இதனை தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தருமபுரத்தில் பட்டினப் பிரவேசத்தை தடை செய்தால் ‘தானே பல்லக்கு தூக்குவேன்’ என பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளது தேவையற்ற சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு வித்திடுவதாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார்.








