தமிழ்நாட்டின் முதுமலை பகுதியில் படமாக்கப்பட்ட “தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. இந்த படம் எதைப்பற்றி பேசுகிறது விரிவாக பார்ப்போம்.
தமிழ்நாட்டின் முதுமலை பகுதியில் யானை பராமரிப்பில் ஈடுபட்டு வரும் பழங்குடி தம்பதிகளான பொம்மன், பெள்ளி ஆகியோரின் கதை தான் “தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்” எனும் படம் ஆஸ்கர் விருதினை வாங்கியதன் மூலம் உலகம் முழுக்க கவனம் ஈர்த்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் ஆசியாவின் மிகப் பெரிய யானைகள் முகாமாக உள்ளது. இந்த முகாமில் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதி யானை பராமரிப்பாளர்களாக பணிபுரிகின்றனர். 2017-ம் ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அய்யூர் பகுதியில் ஒரு யானைக் குட்டி தாயிடமிருந்து பிரிந்து காயத்துடன் சுற்றித்திரிந்தது.
இதனையும் படியுங்கள்: ஆஸ்கர் விருதை தட்டி தூக்கிய நாட்டு நாட்டு பாடல்
இந்த யானையை முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள முகாமிற்கு கொண்டு வந்து ரகு என பெயர் வைக்கின்றனர். இந்த குட்டி யானையை பொம்மனும், பெள்ளியும் பராமரித்து வருகின்றனர். அதே போல 2018-ம் ஆண்டு தாயை பிரிந்த மற்றொரு யானையான பொம்மியையும் இந்த தம்பதி பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில், தாயைப் பிரிந்து தவித்த இரண்டு யானை குட்டிகளை பராமரிக்கும் பழங்குடியின தம்பதியின் கதையை உதகையைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் ஆவணப்படமாக இயக்கியுள்ளார்.
இதனையும் படியுங்கள்: தமிழ்நாட்டில் படமாக்கப்பட்ட முதுமலை தம்பதிகள் குறித்த ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது
” அடிபட்டு காயங்களுடன் இருந்த யானைக் குட்டி பிழைக்காதுன்னு பராமரிக்க யாருமே முன் வரலை. அதன் பின்னர் நாங்களே பார்த்துக்கலாம்னு முடிவெடுத்தோம். அதற்கு ரகு 24 மணி நேரமும் பார்த்துக்க ஆரம்பிச்சோம். காயமெல்லாம் சரியாகி புல் சாப்பிட ஆரம்பித்துவிட்டது அந்த குட்டி யானை.
அந்த நேரத்தில் ஆவணப்பட இயக்குனர் கார்த்திகி வந்தாங்க. எங்களைப் படம் எடுக்க அதிகாரிங்க கிட்ட அனுமதி வாங்கியிருக்கறதா சொன்னாங்க. நாங்களும் சரின்னு ஒத்துக்கிட்டோம். இதுல நடிப்பு என்று எதுவுமே கிடையாது. நாங்க வழக்கமா செய்யற வேலைகள எல்லாமே ரெண்டு வருஷமா வீடியோ எடுத்தாங்க அவ்வளவுதான்” என ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பொம்மன் தெரிவித்துள்ளார்.
யானைகள் குறித்து முழுக்க முழுக்க தமிழ்நாட்டின் முதுமலையில் தயாரிக்கப்பட்ட “தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்படம் தற்போது 95வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஆவண குறும்படத்திற்கான விருதினை வென்றுள்ளது.
– யாழன்







