டெல்லியில் தன் கார் மீது மோதியதற்காக நியாயம் கேட்க வந்த வரை, சுமார் 3 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்ற கார் டிரைவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
டெல்லியில் நேற்று இரவு 11 மணியளவில் காரின் முன்பக்க பேனட்டில் ஒருவர் தொங்கியபடி இருக்க, அந்த காரை ஓட்டும் டிரைவர் அவரை பொருட்படுத்தாமல் எந்த பயமும் இன்றி வேகமாக பயணித்துள்ளார். இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் பதற்றம் அடைந்ததோடு, உடனே போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். உடனே விரைந்து வந்த போலீசார் அந்த வாகனத்தை முந்திச் சென்று வழிமறித்த பின்னரே கார் நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் இருவரையும் விசாரித்த போது காரை ஓட்டிய நபர் ராம்சந்த் குமார் என்றும் அவர் சற்று குடிபோதையில் இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
அதேபோல் தொங்கியபடி வந்த நபரின் பெயர் சேத்தன் என்பதும், வாடகை கார் ஓட்டுநரான அவர் பயணி ஒருவரை இறக்கவிட்டு வரும் வழியில், ராம்சந்த் குமாரின் கார் அவருடைய காரின் மீது இடித்ததாகவும், இதனைத் தொடர்ந்து இறங்கி நியாயம் கேட்க காரின் முன்பக்கம் சென்ற போது ராம்சந்த் குமார் தன்னைப் பொருட்படுத்தாமல் காரை இயக்கியதாக தெரிவித்தார்.மேலும் தான் பலமுறை காரை நிறுத்தச் சொல்லியும் அவர் நிறுத்தவில்லை எனவும், போலீசார் வந்ததால் தான் தன்னால் உயிர் தப்பிக்க முடிந்ததகவும் அவர் தெரிவித்தார்.
பின்னர் சேத்தன் கொடுத்த புகாரின்பேரில் ராம்சந்த் குமாரை கைது செய்த டெல்லி போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முன்னதாக இந்த சம்பவத்தை வாகன ஓட்டிகள் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்ததால் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா








