முதலமைச்சர் விஜயை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை திமுக துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி, முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மத்திய சிறையில் சந்தித்தனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி. “அச்சுறுத்தல்களுக்கு திமுக என்றும் அஞ்சியது இல்லை. எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் அதனை எதிர்கொள்ள திமுக தயாராக இருக்கிறது. தவெக எதிர்க்கட்சிகளை அடக்குவதற்கு மட்டுமே காவல்துறையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது; திமுக ஆட்சியில் இருக்கும்போது தவெகவைச் சேர்ந்தவர்கள் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை எவ்வளவு விமர்சித்து பேசியிருக்கிறார்கள் என்று நீங்கள் பார்த்திருப்பீர்கள்; ஆனால் தவெக போன்று திமுக இப்படி செய்யவில்லை; தவெகவிற்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை; விமர்சனத்தை எதிர்கொள்வதற்கான மனப்பக்குவமும் மனப்பான்மையும் இல்லை.
பாஜக என்ற பெயரை சொல்வதற்கே பயந்து ஆட்சியை நடத்தி வருகிறார்கள் தவெகவினர். திமுக தன்னுடைய கொள்கைகளில் இருந்து தமிழகத்தின் நலன்களில் என்றும் விட்டு கொடுப்பதில்லை. எந்த காலத்திலும் திமுகவும், அதிமுகவும் நெருங்கி வந்தது கிடையாது, தமிழகத்தின் உரிமைகள் என்று வரும் போது ஒருமித்த குரலோடு நிற்போம்” என்று அவர் தெரிவித்தார்.




