குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசின் அலங்கார வாகனம் பங்கேற்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு அலங்கார ஊர்தியை அனுப்பியிருந்தது. எனினும், அலங்கார அணிவகுப்பிற்கு தமிழ்நாடு அரசின் ஊர்தி தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில், மத்திய அரசின் இந்த செயல்பாட்டை எதிர்த்து கடும் கண்டனங்கள் எழுந்தது. இதனால் கடும் ஏமாற்றம் அடைந்ததால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் திமுக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில், குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி வருத்தம் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். கலை, கலாச்சாரம், பண்பாடு, விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு ஆகியவற்றை மத்திய அரசிடம் விளக்கி அனுமதி பெற வேண்டும் எனவும் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதே போன்று, ஹஜ் புனித யாத்திரைக்கான விமான நிலைய பட்டியலில் சென்னை சேர்க்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
https://twitter.com/OfficeOfOPS/status/1483283135605673985
மேலும், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு இவ்விரு கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், அலங்கார ஊர்திகளுக்கான விண்ணப்பங்கள் உரிய விவாதங்களுக்கு பின்னரே நிராகரிக்கப்பட்டுள்ளன என மத்திய அரசின் பொதுப்பணி துறை விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.







