தமிழ்நாட்டில் வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் 60 வயது மேற்பட்டோருக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை வீடு தேடி சென்று செலுத்தும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழ்நாட்டில் பூஸ்டர் தடுப்பூசி இதுவரை 92 ஆயிரத்து 522 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், இனி ஒவ்வொரு வியாழக்கிழமையும், பூஸ்டர் டோஸ் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும் எனத் தெரிவித்தார். ஜனவரி இறுதிக்குள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியுடையவர்கள் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
கொரொனா பாதிப்பு கடந்த வாரத்தில் நாள் ஒன்றிற்கு 2000 வரை உயர்ந்து இருந்தது எனவும், நேற்று கொரொனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 500 அளவிற்கு குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பொங்கலுக்கு நிறைய பேர் சொந்த ஊர்களுக்கு சென்றார்கள், இதனால் வரக்கூடிய நாட்களில் பாதிப்பு அதிகரிக்குமா என்பது 2 நாட்களில் தெரியவரும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், உலகம் முழுவதும் தடுப்பூசி கட்டாயம் என்பது எங்கேயும் இல்லை. பொது சுகாதார விதிகள் அடிப்படையில் தான் திரையரங்கு, உள்ளிட்ட பொது இடங்களுக்கு வரும் போது தடுப்பூசி கட்டாயம் என்று கூறியிருக்கிறோம் எனவும் விளக்கமளித்தார்.