“4,000 உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தை தவெக அரசு விரைவுபடுத்த வேண்டும்” – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியர்களுக்கான பணிநியமனத்தை எளிதாக்கும் வகையில், 6 மாதங்களுக்குள் தேர்வு நடைமுறையை முடிக்க வேண்டும் என்றும், கௌரவ விரிவுரையாளர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் மற்றும் வயது வரம்பு தளர்வு வழங்கவும் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு நேற்று உத்தரவிட்டுள்ளது.

பல ஆண்டுகளாக காலியாக இருந்த உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் ஆசிரியர் தகுதி வாரியம் மூலமாக தகுதித் தேர்வு நடைபெற்றும், இன்றுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படாத நிலையில், தற்போது வெளிவந்துள்ள இந்தத் தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

முந்தைய திமுக ஆட்சியைப் போல உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் மெத்தனம் காட்டி, ஆசிரியராகும் கனவில் இருக்கும் பட்டதாரிகளின் வாழ்வையும், கல்லூரி மாணவர்கள் எதிர்காலத்தையும் சிதைக்காமல், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்! நீதிமன்ற உத்தரவுக்கிணங்க அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.