நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (85) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். கடந்த சில நாட்களாகவே வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரும், கார் பந்தய வீரருமான சகோதரர் அஜித்குமார் அவர்களின் தாயார் மோகினி மணி காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
பாசமிகு தாயாரை இழந்து வாடும் சகோதரர் அஜித்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த மோகினி மணி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




