திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் அரசாக திமுக அரசு உள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட பின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் அரசாக திமுக அரசு உள்ளது என தெரிவித்தார். மேலும், பக்தர்களின் வசதிக்காக வரிசையில் நிற்கும் போது வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க நீர் தெளிப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் இரண்டு சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இந்த திட்டம் வெற்றிகரமாக இருந்தால் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் எனவும், திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மோர், எலுமிச்சை ஜூஸ் வழங்க அறிவுறுத்தியுள்ளதாக கூறினார். மேலும், அனைத்து கோயில்களிலும் அன்னைத்தமிழில் அர்ச்சனை திட்டத்தை செயல்படுத்துவது கடினமான காரியம் என தெரிவித்த அவர், தொடர்ந்து அதற்கு முயற்சி செய்து வருவதக தெரிவித்தார். மேலும், அன்னைத்தமிழில் அர்சனை என்பது கட்டாயமல்ல என தெரிவித்த அவர், விரும்புவோர் தரிசனம் செய்யலாம் என கூறினார்.
அண்மைச் செய்தி: ‘தக்காளி, பீன்ஸ், அவரைக்காய், பீர்க்கங்காய் விலை கிடுகிடு உயர்வு!’
சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பான கேள்விக்கு, விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், விசாரணைக்குழு அளிக்கும் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதேபோல, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் சிலை மாயமானது தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், யார் தவறு செய்திருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிபட தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








