மின்சார சட்டத் திருத்த மசோதா நடந்து முடிந்த கதை அது பற்றி இப்போது பேசி பலனில்லை எனத் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர் கட்சித்தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது தொகுதியில் ரூபாய் 1.95 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து எடப்பாடியை அடுத்த வெள்ளாளபுரம் பகுதிக்குச் சென்று மேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இத்திட்டமானது ரூபாய் 565 கோடி மதிப்பில் அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது. இதன் முதற்கட்ட பணிகளை அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் மேட்டூர் அணை உபரி நீர் திட்டம் குறித்து வெள்ளாளபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், விவசாயிகளுக்கு மிகுந்த பயன் அளிக்கக்கூடிய வகையில் மேட்டூர் அணையின் உபரி நீரை மேட்டூர் ஓமலூர் எடப்பாடி சங்ககிரி ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்ற காரணத்தால் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அரசு இத்திட்டத்தைத் துரிதமாகச் செயல்படுத்தவில்லை. ஆட்சி பொறுப்பேற்ற 14 மாத காலத்தில் இத்திட்டத்தினை நிறைவேற்றி இருந்தால் தற்போது மேட்டூர் அணையின் உபரிநீரை 100 ஏரிகளுக்கு நிரப்பி இருக்க முடியும் எனக் கூறினார்.
விவசாயிகளின் நலனுக்காக அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் குறித்து முழுமையான விவரங்களை அறியாமல் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும், திமுகவின் இந்த நடவடிக்கை விவசாயிகள் மீது அக்கறை இன்மையையே காட்டுவதாகவும் அவர் விமர்சித்தார்.
அண்மைச் செய்தி: ‘ஆத்திரத்தில் வீட்டையே சூறையாடிய கொள்ளையர்கள்; என்ன நடந்தது?’
தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து நிர்வாகத் திறமையற்ற அரசாகவே செயல்பட்டு வருவதாகவும், இதன் காரணமாகத்தான் உயிரிழப்புகள் அதிகரித்து உள்ளதாகவும் கூறிய அவர் அரசும் காவல் துறையும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தத் தவறிவிட்டதாகவும், இதனால் உயிரிழப்புகளும் போதைப் பொருள் புழக்கமும் அதிகரித்து விட்டதாகக் குற்றம்சாட்டினார். மேலும் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடைவிதிக்க வேண்டும் எனப் பலமுறை சட்டமன்றத்தில் வலியுறுத்தியும் இதுவரை தடை விதிக்கப்படாததால் பலர் தங்கள் இன்னுயிர்களை இழக்க நேரிடுவதாகவும் கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தியும் கூட ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதிக்க மக்கள் கருத்தைக் கேட்க வேண்டும் என்று முதலமைச்சர் கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றும் அவர் விமர்சித்தார்.
மேலும், மின்சார சட்டத் திருத்த மசோதா நடந்து முடிந்த கதை அதுபற்றி இப்போது பேசி பலன் இல்லை. ஆனால், கொரோனா பேரிடரால் வருவாய் என்று மக்கள் தவித்து வந்த சூழ்நிலையில் மின் கட்டண உயர்வு சொத்து வரி உயர்வு ஆகியவை மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி உள்ளதாகவும், இந்த காலகட்டத்தில் இது போன்ற சுமையைத் தவிர்த்திருக்க வேண்டும் எனக் கூறினார்.








