கள்ளக்குறிச்சி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள சங்கராபுரம் பகுதியில் செல்வகணபதி என்பவர் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இந்தக் கடையில் திடீரென நேற்று பயங்கர தீ விபத்து நேரிட்டது. கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால், தீ பிடித்தது. அருகிலுள்ள கடைகளிலும் தீ மளமளவென்று பரவியது. அங்கிருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால், அந்தப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
இதையடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். இந்த தீவிபத்தில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்துள் ளனர். படுகாயமடைந்த 10 பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப் படும் என்றும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த தீவிபத்தில் சிக்கி காயமடைந்துவந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள் ளார். இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.








