19 மாவட்ட அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்த ரூ.950 கோடி நிதி வழங்க வலியுறுத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மத்திய சுகாதார துறை அமைச்சரை சந்தித்து மருத்துவ தேவைகள், மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஆதாரம் உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம். 11 மருத்துவ கல்லூரிகளின் கட்டுமான பணிகளை துரிதப்படுத்த திமுக அரசு முயன்று வருகிறது.
பிரதமரை முதலமைச்சர் சந்தித்த போது இந்தாண்டு மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். 11 மருத்துவ கல்லூரிகளை ஆய்வு செய்த குழுவினர் 850 மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்தனர்.
150 மாணவர்கள் என்ற வகையில் 1,650 மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டிய நிலையில் 850 போக மீதமுள்ள 800 மாணவர்களின் சேர்க்கைக்கு கட்டுமான குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என குழுவினர் தெரிவித்தனர். குறைபாடுகள் சரி செய்யப்பட்டு ஆவணங்கள் துறை மூலமாக மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி வேகமாக சென்று கொண்டு இருக்கிறது. கோவாக்சீன் தடுப்பூசி முதல் தவணை செலுத்தி கொண்டவர்களுக்கு 2வது தவணை செலுத்த போதுமான தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை. 10 லட்சம் டோஸ்கள் தற்போது தேவைப்படுகிறது.
தமிழ்நாட்டில் 19 மாவட்ட அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட உள்ளது. ஒவ்வொரு தலைமை மருத்துவமனைக்கும் ரூ.50 கோடி நிதி என்ற வகையில் ரூ.950 கோடி வழங்க வலியுறுத்தப்படும். 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை எட்டியதால் மத்திய அரசு சார்பில் இந்தியா முழுவதும் உள்ள சுகாதார துறை அமைச்சர்கள், செயலாளர்கள் கூட்டம் டெல்லியில் நடக்கிறது.” என அமைச்சர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.