கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் நேற்று இரவு தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டம் நடைபெற்றது. விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் மரணமடைந்ததுடன், குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட மேலும் பலர் படுகாயமடைந்து, பலர் கவலைக்கிடமாக உள்ள பெருந்துயரச் செய்தி பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் தருகிறது. கரூர் முழுவதும் தங்கள் உறவுகளை இழந்து கதறும் மக்களின் மரண ஓலம் நெஞ்சை பிளக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கின்றேன். படுகாயமடைந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய உயர் சிகிச்சை அளித்து உயிர்காத்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன். வருங்காலத்தில் இதுபோன்று, அப்பாவி மக்களின் உயிர் அநியாயமாக பறிபோகும் பெருந்துயரங்கள் நிகழ்ந்தேறா வண்ணம் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
நாம் தமிழர் உறவுகள் மக்களின் உயிர் காக்க குருதிக்கொடை வழங்க கரூர் மருத்துவமனை விரைக! கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த பலர் உயிருக்கு போராடி வரும் நிலையில், கரூர் மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் உள்ள நம்முடைய நாம் தமிழர் கட்சி உறவுகள் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு விரைந்து, குருதி மற்றும் தேவையான மருத்துவ உதவிகள் செய்து கொடுத்து மக்களின் உயிர் காக்க வேண்டுமென அறிவுறுத்துகிறேன்.
உடனடியாக நாம் தமிழர் கட்சியின் ஒவ்வொரு உறவுகளும் மக்களின் உயிர் காக்கும் இப்பெரும்பணியில் தவறாமல் பங்கேற்க வேண்டும். எனதன்பு தம்பி, தங்கைகள் கூடுதல் தகவல்களுக்கு நம்முடைய நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை பாசறை பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







