தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதியில், பெருமாள் குபேரனுக்கு நிதி கொடுத்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி நதிக்கரையில் 108 வைணவ திவ்ய தேசங்களில்
ஒன்றாகவும், நவதிருப்பதிகளில் 8 வது திருத்தலமாகவும் திருக்கோளுா் வைத்தமாநிதி
பெருமாள் திருக்கோவில் விளங்குகிறது.
இந்த இடம் சுவாமி ராமானுஜா் காலத்தில், இத்தலத்தில் வாழ்வதை பெருமையாக கூறும் ” திருக்கோளுா் பெண்பிள்ளை ரகசியம் ” என்னும் சிறப்பான பாடல் கிடைத்த தலமாகும். “கண்ணினுன் சிறுத்ததாம்பு ” இயற்றிய ஸ்ரீ மதுரகவி ஆழ்வாா் அவதரித்த தலம். நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்த திருத்தலமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இத் திருக்கோயிலில், வருடம் முமுவதும் திருவிழாக்கள் நடைபெறும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இருப்பினும், மாசி மாதம் புனா்பூச நட்சத்திரத்தில் பெருமாள் குபேரனுக்கு நிதி கொடுக்கும் தினத்தை இங்கு சிறப்பாக கொண்டாடுகின்றனா். நிதியை இழந்த குபேரனுக்கு அவன் இழந்த செல்வத்தை பாதுகாத்து அளந்ததால் , மரக்காலைத் தலைக்கு வைத்து பள்ளி கொண்ட கோலத்தில் மூலவா் அருள்பாலிக்கின்றாா். மேலும், பக்தா்கள் தங்களின் பணத்தை பெருமாளின் தலைப்பகுதியில் மரக்காலில் வைத்து வணங்கி பெற்று செல்கின்றனர். அதனை அவர்கள் வீடுகளில் வைத்தால் செல்வம் பெருகும் என்பது
நம்பிக்கை.
இந்த விழாவில் இன்று, மூலவருக்கு சிறப்பு பூச்சட்டை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
மேலும், உற்சவா் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைத்தமாநிதி பெருமாள் மற்றும் தாயாா்
குமுதவல்லி, கோளுர் வள்ளி தேவியரும் மற்றும் மதுரகவி ஆழ்வாா் , குலசேகர ஆழ்வாா் ஆகியோர் உடன் பூப்பந்தல் கீழ் சிறப்பு அலங்காரத்தில், மகா மண்டபத்தில் சேவை சாதித்தருளினாா்.
உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சயன கோலத்தில் இருக்கும் வைத்தமாநிதி பெருமாளையும், தாயாருடன் அருள்பாலிக்கும் உற்சவ மூர்த்திகளையும் தரிசனம் செய்தனர். மேலும், ஏற்பாடுகளை திருக்கோவில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.
கு.பாலமுருகன்