வெறும் 30 லட்சம் மக்கள்தொகை கொண்ட ஒரு குட்டி நாடு 2018ம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி வரை முன்னேறி சாதித்தது… பெரிதாக நட்சத்திர வீரர்கள் இல்லாத அந்த அணியை தனது அசாத்திய ஆளுமையால் கனவு கோப்பைக்கு அருகில் கொண்டு சென்றார் அந்த அணியின் கேப்டன் ((Luka Modric))லூக்கா மோட்ரிச்….
ஸ்பெயினைச் சேர்ந்த புகழ்பெற்ற ரியல் மேட்ரிட் கிளப் அணிக்காக விளையாடி வரும் மோட்ரிச், இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த மிட்பீல்டர்களில் ஒருவராக போற்றப்படுபவர்… களத்தின் மையத்தில் இருந்து லாங் ரேஞ்ச் பாஸ்கள் மூலம், எதிரணியின் தடுப்பை உடைத்து கோல்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதில் வல்லவர் மோட்ரிச்.. ரியல் மேட்ரிட் அணிக்காக பல்வேறு கோப்பைகளை வென்றாலும், குரோஷியா அணியின் தலைவிதியை மாற்றும் பொறுப்பையே தனது முதல் கடமையாய் கருதினார் மோட்ரிச்..
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
2018ல் நடந்த உலகக்கோப்பையில் அவரது தலைமையில் களமிறங்கிய குரோஷியா, மெஸ்ஸி தலைமையிலான பலம் வாய்ந்த அர்ஜெண்டினா அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது… அந்த போட்டியில் 25 மீட்டர் தூரத்தில் இருந்து கோல் அடித்து அசத்தினார் மோட்ரிச்…சாகச பயணத்தைத் தொடர்ந்த குரோஷியா… அடுத்த சுற்றில் டென்மார்க்கையும்… காலிறுதியில் ரஷ்யாவையும் வீழ்த்தி அரையிறுதியில் காலெடுத்து வைத்தது..
அரையிறுதியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியின் அதிரடி தாக்குதலை சமாளித்த குரோஷியா, ஆட்டத்தை கூடுதல் நேரத்திற்கு கொண்டு சென்றது.. அப்போது ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருந்தபோது அந்த தருணம் நேர்ந்தது. குரோஷிய வீரர் மேன்சுகிச் அபாரமாக ஒரு கோல் அடிக்க வரலாற்றில் முதன்முறையாக உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குரோஷியா…
பிரான்ஸ் உடனான அந்த இறுதிப்போட்டியில் 4க்கு 2 என்ற கோல் கணக்கில் போராடி வீழ்ந்தாலும்… குரோஷியாவின் கனவுப்பயணம் கத்துக்குட்டி அணிகளுக்கு பெரும் உந்துசக்தி என்பதை மறுப்பதற்கில்லை… தனது ஆளுமையால் குரோஷியா அணிக்கு பெருமை தேடித்தந்த மோட்ரிச்.. உலகக்கோப்பையின் சிறந்த வீரருக்கான கோல்டன் பால் விருதை வென்றார்… அதன் பிறகு.. உலகின் தலைசிறந்த வீரருக்கான பலோன் டோர் விருதும் மோட்ரிச்சை அங்கீகரித்து, அலங்கரித்தது.
– பரணிதரன்