இணையத்தை தெறிக்க விடும் தெம்மா… தெம்மா… தெம்மாடி காத்து…

வாரிசு படத்தின் ”ரஞ்சிதமே”, வாத்தி படத்தின் ”ஒருதல காதல்“ போன்ற ஸ்டார் ஹீரோக்களின் பாடல்களை பின்னுக்கு தள்ளும் அளவுக்கும், மலையாள பாடல் ஒன்று தற்போது ட்ரெண்டாகி வருகிறது. இன்றைய தேதிக்கு இணையத்தை கலக்கி வரும்…

வாரிசு படத்தின் ”ரஞ்சிதமே”, வாத்தி படத்தின் ”ஒருதல காதல்“ போன்ற ஸ்டார் ஹீரோக்களின் பாடல்களை பின்னுக்கு தள்ளும் அளவுக்கும், மலையாள பாடல் ஒன்று தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

இன்றைய தேதிக்கு இணையத்தை கலக்கி வரும் ஒரு பாடல் என்றால், அது மலையாளத்தில் 2004ம் ஆண்டு வெளியான ‘rain rain come again’ என்ற படத்தில் இடம்பெற்ற ’தெம்மாடி காத்தே’ என்ற பாடல்தான். இந்த பாடலுக்கு சமீப காலமாக கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் பலர் ஜாலியாக ஆடி பாடி ரீல்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

வெளியான சமயத்தில் இந்த படமும் சரி, இந்த பாடலும் சரி அவ்வளவாக கண்டுகொள்ளப்படவில்லை. இந்நிலையில், சுமார் 18 வருடங்கள் கழித்து இந்த ”தெம்மாடி காத்தே” பாடலை தூசி தட்டி எடுத்த சில கேரள மாணவிகள், அதற்கு இணையத்தில் புத்துயிர் அளித்துள்ளனர். அவர்கள் ரீல்ஸ் செய்து பதிவிட்ட, அடுத்த சில நாட்களில் சோஷியல் மீடியாக்களை மையம் கொண்ட இந்த பாடல், தற்போது வலுப்பெற்று 2K கிட்ஸ் மத்தியில் புயலாக வீசி வருகிறது. இந்த பாடல் இத்தனை பிரபலமானதற்கு அதன் ட்யூன் மட்டுமல்ல, மாணவிகள் போட்ட ஸ்டெப்பும் முக்கிய காரணம்.

தொடக்கத்தில் இந்த பாடலுக்கு மாணவிகள் மட்டுமே ரீல்ஸ் செய்து வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், பெண்களுக்கு போட்டியாக தற்போது இளைஞர்களும் களத்தில் குதித்து, தெம்மாடி காத்தே பாடலுக்கு அடுத்தடுத்து பல ரீல்ஸ்களை செய்து வெளியிட்டு வருகின்றனர். வீடு, வகுப்பறை, கோல்ஃப் மைதானம், விளையாட்டு மைதானம், பூங்கா, அலுவலகங்கள், சாலைகள், கடை வீதிகள் என எங்கும் வீசத் தொடங்கியுள்ளது, ’தெம்மா தெம்மா தெம்மாடி காத்து’.

இன்று இந்த பாடல் இணையத்தை கலக்கலாம். ”ஆனா, இதுக்கான வெத…….. தமிழ் சினிமா போட்டது….” என சிலாகிக்கின்றனர், கோலிவுட் ரசிகர்கள். காரணம், 2001ம் ஆண்டு வெளியான சாக்லெட் படத்தில் இடம்பெற்ற ”மல மல மருதமலை” பாடலின் சாயலில் தெம்மாடி காத்தே உள்ளதாகவும், அந்த பாடலும் கல்லூரி விடுதி மாணவிகள் ஆடுவதை போன்றே அமைக்கப்பட்டிருந்ததையும் அவர்கள் சுட்டி காட்டுகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்பு ஜிமிக்கி கம்மல் என்ற மலையாள பாடலும், அதன் நடனமும் இதேபோன்று தமிழ்நாட்டில் பலத்த வரவேற்பை பெற்றது. தற்போது, அந்த இடத்தை தெம்மாடி காத்து பிடித்துள்ளது. இந்த பாடலுக்கான நடன அசைவு சிலருக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்தினாலும், பலரையும் இந்த பாடல் கவர்ந்து விட்டது என்பதே நிதர்சனம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.