சென்னையில் உள்ள பிரபல நகைக்கடையில் தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்த வடமாநில இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை தாம்பரத்தை அடுத்த கெளரிவாக்கத்தில் ப்ளூஸ்டோன் என்ற பிரபல நகைக்கடை அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை, இந்த நகைக்கடை கட்டத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த குழாய் வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர், கடையில் இருந்த தங்கம் மற்றும் வைரநகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளார். லாக்கரை உடைக்க முயற்சிக்கும் போது அலாரம் அடித்ததால், வெளியே வாடிக்கையாளர்களின் பார்வைக்காக வைத்திருந்த தங்கம் மற்றும் வைர நகைகள் அனைத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். ரயில்நிலையங்கள், விமான நிலையங்கள், உள்ளிட்ட இடங்களில் கொள்ளையன் தப்பிச் செல்லாமல் இருக்க தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து இன்று காலை காவலாளி கொடுத்த தகவலின் அடிப்படையில், முதற்கட்டமாக 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
பின்னர் போலீசார் கைப்பற்றிய சிசிடிவி காட்சிகளில், வடமாநில இளைஞர் ஒருவர் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து வடமாநில இளைஞர் தங்கியிருந்த இடத்திற்கு சென்று, அங்கிருந்த மொட்டை மாடியில் மறைத்து வைத்திருந்த நகைகளை மீட்டனர். மேலும் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில இளைஞரையும் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே, கொள்ளையர்களை கைது செய்தது மட்டுமல்லாமல், நகைகளையும் போலீசார் மீட்டுள்ளது பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.







