தளபதி 67 படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்ற படக்குழு

தளபதி 67 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக தனி விமானம் மூலம் இன்று படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளனர். விஜய்- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் அவர்களது ரசிகர்களிடையே…

தளபதி 67 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக தனி விமானம் மூலம் இன்று படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளனர்.

விஜய்- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் அவர்களது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தின் கதையும், படத்தில் இடம்பெற்ற பாடல்களும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைத்திருந்தது.

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் லோகேஷ் – விஜய் கூட்டணி இணைந்து பணியாற்றும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், லோகேஷ் கமல் அவர்களை வைத்து விக்ரம் படத்தினை எடுக்கும் முயற்சியில் இறங்கினார். விஜயும் இயக்குனர் வம்சியுடன் கைகோர்த்து வாரிசு படத்தில் நடித்தார். இருவருமே ஆளுக்கொரு பக்கமாக இயங்கி மாபெரும் வெற்றியை கொடுத்திருக்கும் நிலையில் தற்போது தளபதி 67 என்ற படத்தில் மீண்டும் கைகோர்த்து பணியாற்ற தொடங்கியுள்ளனர்.

இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேற்று வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பில் விஜய் அவர்களோடு இணைந்து பணியாற்ற உள்ள படக்குழுவினர் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருந்தது. மேலும் படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். தளபதி 67 படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில், இன்று தளபதி 67 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக தனி விமானம் மூலம் படக்குழுவினர் சென்னையில் இருந்து காஷ்மீருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இந்த பயணத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன், நடிகை த்ரிஷா, பிரியா ஆனந்த் மற்றும் நடிகர் சத்யராஜ் என ஏராளமானோர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.