தமிழகத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் மத்திய அரசுக்கு முதலமைச்சர் துணை நிற்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்!

தமிழகத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் மத்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் துணை நிற்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “தமிழகத்தின் இரயில்வே திட்டங்கள் மற்றும் தமிழக ரயில்வே துறைக்கு மத்திய அரசு இதுவரை ஒதுக்கிய நிதி உள்ளிட்டவைகள் தொடர்பாக திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. திருச்சி சிவா அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார் நமது மாண்புமிகு மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள்.

அதாவது, UPA ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் இரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும் 8 மடங்கு அதிக நிதி, மொத்தம் 19 புதிய இரயில் திட்டங்கள், கிட்டத்தட்ட 500 கிமீ வரையிலான புதிய இரயில் பாதைகள் உள்ளிட்ட பல வளர்ச்சித் திட்டங்கள் தற்போதைய NDA ஆட்சியில் தமிழகத்திற்கு வாரி வழங்கப்பட்டுள்ளன என்பதை அழுத்தம் திருத்தமாக மீண்டும் ஒருமுறை எடுத்துக் கூறியுள்ளது நமது மத்திய அரசு. அதுமட்டுமன்றி, மத்திய அரசின் மேலும் புதிய திட்டங்களுக்கு மொத்தம் 4,612 ஹெக்டேர் நிலங்கள் தேவைப்படும் நிலையில், முந்தைய திமுக அரசு அதில் வெறும் 26% அதாவது 1,178 ஹெக்டேர் நிலங்களை மட்டுமே கையகப்படுத்திக் கொடுத்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது நமது மத்திய அரசு.

எனவே, முந்தைய அரசைப் போல கண்மூடித்தனமான மோதல் போக்கை கடைபிடிக்காமல், இரயில்வே திட்டங்களுக்கு தேவைப்படும் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்தி, தமிழகத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் மத்திய அரசுக்கு துணை நிற்குமாறு முதல்வர் தவெக அவர்களை கேட்டுக் கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.