சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 5.8 கிமீ முதல் 7.6 கிமீ உயரம் வரை வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது, முதல் மிதமான மழை பெய்யக்கூடும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று மாலை 7 மணி வரை 23 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. மேலும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கரூர், நாமக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, தேனி, தென்காசி, கோவை, திருநெல்வேலி ஆகிய 19 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




