“திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றுவதை முதல்வர் உறுதி செய்ய வேண்டும்!” – வானதி சீனிவாசன்

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுவதை முதலமைச்சர் விஜய் உறுதி செய்ய வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

பாஜக முன்னாள் தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் அறுடை வீடுகளில், முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், தமிழர்களின் ஆன்மிக அடையாளங்களில் ஒன்றாகும். இக்கோவில் அமைந்துள்ள மலை மீதுள்ள தீபத்தூணில் காலங்காலமாக கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.

ஆனால், அன்னிய ஆங்கிலேயர் ஆட்சியில், திருப்பரங்குன்றம் முருகன் மலையில் தீபம் ஏற்ற தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, அப்போதே முருகப் பக்தர்களான உணர்வுள்ள தமிழர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். தீபத் தூணில் தீபமேற்றும் உரிமையை நிலைநாட்ட, 1920ல் மதுரை நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், லண்டன் பிரிவி கவுன்சில் என, அப்போதிருந்த கோவில் நிர்வாகம் சட்டப் போராட்டம் நடத்தியது.

1920 முதல் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற முருகப் பக்தர்கள் இடைவிடாது போராடி வருகின்றனர். ஆனால், பாஜகவும், இந்து அமைப்புகளும்தான், தேவையின்றி மதப் பிரச்னையை கிளப்புவதாக, மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மதத்தை மட்டும் எதிர்ப்பவர்கள் கூச்சலிட்டு வருகின்றனர். ஆனால், பாஜகவும், இந்து அமைப்புகளும் தொடங்கப்படுவதற்கு முன்பிருந்தே தீபத் தூணில் தீபமேற்றும் உரிமை காக்க போராட்டங்கள் நடந்து வருவதை வரலாற்று ஆவணங்களில் இருந்து அறிய முடிகிறது.

கடந்த ஆண்டு தீபத் தூணில் தீபமேற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும், அப்போதிருந்த இந்து விரோத திமுக அரசை அதை செயல்படுத்தவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த சென்றவர்கள் மீது, திமுக அரசின் காவல்துறை அடக்குமுறைகளை ஏவியது.

புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, இந்த விவகாரத்தில் திமுகவை அப்படியே பின்பற்றியதோடு, திமுகவை விட மிக மோசமான இந்து விரோதப் போக்கை கடைப்பிடித்தது. தீபம் ஏற்ற தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியது. தீபத்தூண் அமைந்துள்ள இடம், தர்காவுக்கு சொந்தமானது என்றெல்லாம் தவெக அரசின் கட்டுக்குள் உள்ள மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் வைக்கப்பட்டன. திமுகவைப் போல, தவெகவும் இந்து விரோத கட்சிதான் என்ற உண்மை வெளிப்பட்ட தருணங்கள் இவை.

ஆனாலும், வரும் 24ம் தேதி கார்த்திகை தீபத்தன்று, திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடைக்கால உத்தரவு என்றாலும், இது, முருகப் பக்தர்களின் 100 ஆண்டுகளுக்கு மேலான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இந்த தீர்ப்பை தவெக அரசு செயல்படுத்த வேண்டும். திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும்.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை, சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகம் என அனைத்துத் தரப்பும், தீபத் தூணில் தீபமேற்றக் கூடாது என வாதிடுகின்றனர். ஆனால், முருகப் பக்தர்கள்தான், தீபத் தூணில் தீபமேற்ற சட்டப் போராட்டம் நடத்துகின்றன. கோவிலுக்கு ஆதரவாகப் போராட வேண்டிய கோவில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும், கோவிலுக்கு எதிராக போராடுகின்றன. இந்த அவலம் வேறு எந்த நாட்டிலும் நடக்காது. நடப்பதை எல்லாம், இந்துக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மதச்சார்பின்மை என்ற பெயரில், இந்துக்களுக்கு அநீதி இழைத்தால் அதற்கான தண்டனை கிடைத்தே தீரும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.