முதல் நாளிலேயே முறியடித்த சாதனைகள்!
Rockstar Games நிறுவனம் உருவாக்கிய GTA VI வீடியோ கேம் நவம்பர் 19 – வியாழக்கிழமை வெளியானது. வெளியீட்டுக்கு முந்தைய காலத்திலேயே 3.25 கோடி பிரதிகள் விற்பனையாகியுள்ளதாக அந்நிறுவனம் நவம்பர் 20 – வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
வெளியான முதல் 24 மணி நேரத்தில் மட்டும் இந்த கேம் 3.79 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு வெளியான GTA V, முதல் நாளில் சுமார் 800 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியிருந்தது. தற்போது அந்தச் சாதனையை GTA VI கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிக வருவாயுடன் முறியடித்துள்ளது.
இதுவரை உலகளவில் அதிக வசூல் செய்த திரைப்படமாகக் கருதப்படும் Avengers: Endgame படத்தின் சுமார் 2.94 பில்லியன் டாலர் வசூலையும் GTA VI முந்தியுள்ளது. இதன் மூலம் வீடியோ கேம் மட்டுமின்றி ஒட்டுமொத்த பொழுதுபோக்குத் துறையிலும் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
லூசியா, ஜேசன் கதாபாத்திரங்களுக்கு வரவேற்பு!
GTA VI விளையாட்டில் லூசியா மற்றும் ஜேசன் என்ற இரண்டு குற்றவாளிகளை மையமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது. இருவரும் Vice City நகரின் ஒளிரும் தெருக்களில் பயணிக்கும் வகையில் ஆக்ஷன் மற்றும் சாகச அம்சங்களுடன் இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வெளியானதை உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடினர். சிலர் விளையாடுவதற்காகவே அலுவலகங்களில் விடுமுறை எடுத்துள்ளனர். இன்னும் சிலர் தடையின்றி விளையாடுவதற்காகத் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் முன்கூட்டியே ஒப்பந்தம் செய்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ.8,000 கோடிக்கும் மேல் செலவில் உருவாக்கம்?
GTA VI விளையாட்டை உருவாக்குவதற்கு அதன் தாய் நிறுவனமான Take-Two Interactive, 1 பில்லியன் அமெரிக்க டாலர் அல்லது அதற்கும் அதிகமாகச் செலவிட்டிருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. இதன் மூலம் உலகின் அதிக செலவில் உருவாக்கப்பட்ட பொழுதுபோக்கு திட்டங்களில் ஒன்றாகவும் GTA VI கருதப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் முன்பதிவு தொடங்கிய நிலையில், எத்தனை பிரதிகள் முன்பதிவு செய்யப்பட்டன என்ற விவரத்தை நிறுவனம் வெளியிடவில்லை. இதற்கிடையே, உலகம் முழுவதும் ரசிகர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு தங்களை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளதாக Rockstar Games நிறுவனத்தின் தலைவர் சாம் ஹவுசர் தெரிவித்துள்ளார். இந்த வெளியீடு நிறுவனத்தின் புதிய அத்தியாயத்தின் தொடக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தகட்டமாக என்ன?
GTA VI விளையாட்டின் PC பதிப்பு எப்போது வெளியாகும், அதன் ஆன்லைன் வெர்ஷன் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது குறித்த அறிவிப்புகளை முதலீட்டாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். குறிப்பாக, ஆன்லைன் வெர்ஷன் நிறுவனத்துக்குத் தொடர்ந்து வருவாய் ஈட்டித் தரும் முக்கிய ஆதாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு வெளியீடுகளும் 2027-ம் ஆண்டில் நடைபெற வாய்ப்புள்ளதாக சில சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.




