நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் தற்காலிக பராமரிப்பாளராக பணியாற்றி வரும் பெள்ளிக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் ஆசியாவிலேயே பழமையான யானைகள் முகாம்களில் ஒன்று. ஒவ்வொரு யானையும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பாகன் மற்றும் காவடியால் (பராமரிப்பாளர்) பராமரிக்கப்பட்டு வருகின்றது. முகாம்களில் உள்ள யானைகளை தனிகவனத்துடன் அவர்கள் பராமரித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் ரகு, பொம்மி ஆகிய இரு குட்டி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைகளை பொம்மன், அவரது மனைவி பெள்ளி ஆகியோர் பராமரித்து வந்தனர். இந்த நிகழ்வை மையமாக வைத்து ”தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்” என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டதை தொடர்ந்து அப் படத்திற்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து குட்டி யானைகளுடன் பொம்மன், பெள்ளி சர்வதேச அளவில் பிரபலமடைந்தனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி முதுமலைக்கு வருகை புரிந்து 2 பேரையும் பாராட்டினார். தொடர்ந்து நாடு முழுவதும் பொம்மன், பெள்ளிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் கடந்த 18-ம் தேதி குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முவை டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பொம்மன், பெள்ளி சந்தித்து பாராட்டுகள் பெற்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில், வனத்துறை சார்பில், நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் தற்காலிக யானை பராமரிப்பாளராக பணியாற்றி வந்த பெள்ளிக்கு, முதல் பெண் காவடியாக (யானை பராமரிப்பாளர்) நியமிக்கப்பட்டதற்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இவர் யானை பராமரிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் ஆவார்.
இது குறித்து தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், வனத்துறை சார்பில் நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் காவடியாக (யானை பராமரிப்பாளர்) நியமிக்கப்பட்டுள்ள வி.பெள்ளிக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார்.” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
https://twitter.com/CMOTamilnadu/status/1686639785836957696
மேலும் பாகன்கள் மற்றும் காவடிகளின் பணிகளை பாராட்டும் விதமாக தமிழ்நாடு அரசு முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 91 பாகன்கள் மற்றும் காவடிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கியுள்ளதோடு, சூழலுக்கியைந்த சமூக இணக்கமான வீடுகள் ரூ.9.10 கோடி செலவில் கட்டிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அரசாணையும் பிறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







