டெண்டர் முறைகேடு தொடர்புடைய நிறுவனங்கள் மீதான வழக்கு: ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான டெண்டர் முறைகேடு வழக்கில்  தொடர்புடைய நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்  நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.  முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர்…

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான டெண்டர் முறைகேடு வழக்கில் 
தொடர்புடைய நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்  நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு
பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதில் டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச  ஒழிப்புத்துறை எஸ்.பி.பொன்னி ஆரம்பகட்ட  விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கை கை விடுவது என அரசு முடிவு செய்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக டெண்டர் முறைகேடு தொடர்பாகவும், வருமானத்துக்கு அதிகமாக ரூ.58 கோடி சொத்து சேர்த்ததாகவும் குற்றம்சாட்டி இரண்டு வழக்குகள் பதிவு
செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் அடங்கிய அமர்வு,
டெண்டர் பணிகளில முறைகேடு தொடர்பான புகாரில் வேலுமணி மீதான வழக்கை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய எம்.எஸ். கன்ஷ்ட்ரக்சென் இன்ஃப்ரா லிமிடெட், ஆலம் கோல்டு,ஆலயம் ஃபவுண்டேஷன், வைதூரியா ஹோட்டல் மற்றும் கண்ஷ்ட்ரோ மால் ஆகிய நிறுவனங்கள் தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி
தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அதில், எஸ்.பி. வேலுமணி  மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் பொது
ஊழியர் அவருக்கும் , தங்களுக்கும் தொடர்பில்லை என்பதால் தங்கள் மீதான  வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடைபெற்றது. அப்போது, 5
நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்து அறப்போர் இயக்கம்
சார்பில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், இந்த நிறுவனங்களுக்கு முறைகேட்டில் தொடர்புள்ளது என்றும் அதற்கான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து, 5 நிறுவனங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.