மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது – சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேச்சு…!

மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று தமிழ் நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார்.

தமிழ் நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் நேற்று (ஜீன். 18) தொடங்கியது. முதல் நாளான நேற்று ஆளுநர் அர்லேக்கர் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று (ஜூன்19) சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்று கூடியுள்ளது. முதல் நிகழ்வாக இன்று மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய் காவிரி குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவிற்கு எதிராக தீர்மானத்தை முன்மொழிந்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்கிறோம்; மேகதாது அணை திட்டத்துக்கு எந்த அனுமதியையும் மத்திய அரசு வழங்கக் கூடாது. அரசியலே மக்களுக்கானது தான்; அரசியல் கட்சி என்றாலும் மக்களுக்கானது தான்; கட்சிகளிடையே கொள்கை, நிலைப்பாட்டில் மாற்றம் இருக்கலாம்; மனசாட்சி உள்ள மக்களாட்சியை வழங்க விரும்புகிறோம்; விவசாயிகளுக்காகவும், மக்களுக்காகவும் நின்றே ஆக வேண்டியது நமது கடமை, நமது உரிமை” என்றார். இதனை தொடர்ந்து தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.