சொத்துவரி, வீட்டுவரி உள்ளிட்ட மற்ற வரி உயர்வை இன்னும் ஓராண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும் என சர்வதேச உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் சுரேஷ் கண்ணன் கூறியுள்ளார்.
சர்வேதச உரிமைகள் கழகம் சார்பில் தமிழகம்-புதுச்சேரி அனைத்து நிர்வாகிகளுக்குமான கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சர்வதேச உரிமைகள் கழக நிறுவன தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், இந்த கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளோம். மத்திய அரசுக்கும்,மாநில அரசுக்கும் சில கோரிக்கைகளை வைத்துள்ளதாக கூறினார்.
மாநில அரசு தற்போது செயல்படுத்தி உள்ள மின் உயர்வு திட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். கொரோனா காலம் கழிந்து இப்போதுதான் மக்கள் சராசரி நிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் மின் உயர்வை வாபஸ் பெற வேண்டும்.
அதேபோல் சொத்துவரி, வீட்டுவரி உயர்வு மற்ற வரி உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என்று மாநில அரசு சொல்லும் பொழுது, மத்திய அரசு இதற்கு இசைவு கொடுத்து மாநில அரசு இதனை ஓராண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும். அதேபோல் பெட்ரோல், டீசல் விலை உயர்வில் மாநில அரசு விலையை குறைத்து உள்ளது. எனவே மத்திய அரசு இன்னும் விலை குறைப்பு செய்ய வேண்டும் ஏனென்றால் சாதாரண மக்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே பெட்ரோல், டீசல் விலை குறைக்க வேண்டுமெனக் கூறினார்.
இலங்கையில் தற்போது நடக்கக்கூடிய பிரச்சனைக்கு இந்திய அரசும், தமிழக அரசும் அனைத்து உதவியும் செய்தமைக்காக இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ள சிற்பி திட்டம் மிக அருமையான திட்டமாக உள்ளது. அரசு பள்ளிகளில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தை பேணும் திட்டமாக இது அமையும் எனக் கூறி அதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். தொடர்ந்து போதை வஸ்துக்களை தடைசெய்ய காவல்துறை முழுவீச்சில் செயல்படுத்தப்பட வேண்டும் என அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, உக்ரைனில் இருக்கக்கூடிய போர் பதற்றங்களை சரிப்படுத்த இந்திய அரசு தலையிட்டு செயல்படுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக சுரேஷ் கண்ணன் கூறினார்.








