முக்கியச் செய்திகள் சினிமா

50 ஆண்டுகள் தமிழ் தொண்டு-கவிஞர் வைரமுத்துவுக்கு விழா எடுத்த நியூஸ் 7 தமிழ்!

கவிப்பேரரசு வைரமுத்து 50 ஆண்டுகள் தமிழுக்கு ஆற்றிவரும் பங்களிப்பை சிறப்பிக்கும் வகையில், நியூஸ் 7 தமிழ் சார்பில் கவிதைப் போட்டி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கவிப்பேரரசு வைரமுத்துவின் இலக்கிய பொன் விழாவைக் கொண்டாடும் வகையில் நியூஸ் 7 தமிழ் சார்பில் மாபெரும் கவிதைப் போட்டி நடத்தப்பட்டன. இளம் தலைமுறையினரிடம் தமிழை வளர்க்கும் முயற்சியாகவும், தனது 50 ஆண்டு காலத்தை தமிழுக்காக கடத்திய கவிஞர் வைரமுத்துவின் பெருமைகளை முதலில் சிறப்பிக்கும் ஊடகமாகவும் இந்த நிகழ்ச்சியை நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கவிதைப் போட்டிக்காக கள்ளிக்காட்டுத் தங்கம், தமிழின் உயரம், தமிழன் உயரம் என்ற மூன்று தலைப்புகளை நிர்ணயித்தது. இதில், பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட கவிதைகள் வரப்பெற்றன. இதில் இருந்து முத்தான கவிதைகளை கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி, பதிப்பாளர் மற்றும் எழுத்தாளருமான காவ்யா சண்முகசுந்தரம், பேராசிரியர் ரவிக்குமார் ஆகிய மூன்று பேர் தேர்ந்தெடுத்தனர்.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளுக்கு சான்றிதழ் மற்றும் விருது வழங்கும் ‘தமிழின் தவப்புதல்வன் விழா’ நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. விழா நாயகனும், கவிஞருமான கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்டு கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு சான்றிதழ்களையும், விருதுகளையும் வழங்கினார். முன்னதாக தமிழ்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியதும், நியூஸ் 7 தமிழின் நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல் வரவேற்பு உரை ஆற்றினார்.

அப்போது, தமிழுக்கு வைரமுத்து நிகழ்த்திய தொண்டுகளை பற்றியும், கவிதைகளின் தாக்கத்தை பற்றியும் பேசினார். இளைய சமூகத்தினரிடையே தமிழை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் வைரமுத்துவின் பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில் இந்த கவிதை போட்டி நடத்தப்பட்டதாக தெரிவித்தார். செய்திகளை கடந்து நியூஸ் 7 தமிழ் மக்களுக்காகவும், சமூகம் சார்ந்த விஷயங்களை வளர்த்தெடுக்கும் வகையிலும் செயல்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

பின்னர் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல் சால்வை அணிவித்து கௌரவித்தார். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்களவை உறுப்பினர் செல்லக்குமாருக்கும் அவர் சால்வை அணிவித்து சிறப்பித்தார்.

இதைத்தொடர்ந்து, பல்வேறு தரப்பினரிடமிருந்து வரப்பட்ட கவிதைகளை தேர்ந்தெடுத்த நடுவர்களான கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி, எழுத்தாளர் காவ்யா சண்முகசுந்தரம், பேராசிரியர் ரவிக்குமார் ஆகியோருக்கு வைரமுத்து பொன்னாடை போத்தி நினைவு பரிசு வழங்கினார்.

இதைத்தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய மக்களவை உறுப்பினர் செல்லக்குமார், வைரமுத்துவின் கவிதைகளை சுட்டிக்காட்டி பேசினார். வைரமுத்துவையும், அவரின் காவியங்களையும் தான் எவ்வாறு நேசிப்பதாக விளக்கி பேசினார்.

எழுத்து உலகில் நுழைந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் கவிப்பேரரசுக்கு வாழ்த்துகளையும் அவர் தெரிவித்து கொண்டார். பின்னர் விழா பேரூரையாற்றிய கவிஞர் வைரமுத்து, நியூஸ் 7 தமிழ் செய்து வரும் முன்னெடுப்புகளுக்கு நன்றி தெரிவித்தார்.

செய்திகளுக்கு அப்பால் படகென செல்லும் நியூஸ் 7 தமிழ் நிர்வாகத்திற்கும், ஊடகத்துறையில் சிறந்த பங்களிப்பை செலுத்தி வரும் நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மலுக்கும் அவர் நன்றி மற்றும் பாராட்டு தெரிவித்தார். 50 ஆண்டுகள் கடக்கும் தனக்கு ஊடகத் துறையில் முதன் முதலில் நியூஸ் 7 தமிழ் தான் விழா எடுத்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் கூறினார். விழாவில் பங்கேற்று பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்த அவர், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.

தன்னை பொறுத்தவரை போட்டியில் வெற்றி பெறுவது இரண்டாவது பார்வைதான் என கூறிய வைரமுத்து, போட்டியில் பங்கேற்பது தான் முதலில் பாராட்டுக்குரியது என பெருமிதம் தெரிவித்தார். மேலும் ஆயிரத்து 500-க்கு மேல் வரப்பெற்ற கவிதைகளை ஆராய்ந்து தேர்ந்தெடுக்கும் கடினமான பணியை செய்த நடுவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இது தனக்கு பெருமை சேர்க்கும் விழாவாக இல்லாமல் தமிழுக்கு பெருமை சேர்க்கும் விழாவாக தான் பார்க்கிறேன் என்றார். அழிந்து வரும் தமிழை பாதுகாக்க இதுபோன்ற போட்டிகள் தேவை என கூறினார். வளரும் இளைஞர்கள் தமிழை கைவிடகூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கைப்பேசிகளில் பொழுதை கழிக்கும் இளைஞர்கள், தமிழை படிக்க வேண்டும் என்றும் இலக்கியம், பெருங்காப்பியங்களை பாதுகாக்க முன்வரவேண்டும் என்றும் அவர் அன்பான கோரிக்கை வைத்தார். இந்த 50 ஆண்டுகள் தான் எழுதிய எழுத்துக்கள் அனைத்தும் எழுதி பயின்றவை என்றார். தனது வாழ்க்கையில் பொழுதுபோக்கு இல்லை, கேளிக்கைகள் இல்லை, பொதுவாழ்க்கைக்கு நேரம் ஒதுக்கவில்லை என்ற அவர், காலையில் பாடல் வரிகளுக்கும், இரவு தமிழ் எழுத்துக்கும் நேரத்தை செலவழித்து வந்ததாக அவர் குறிப்பிட்டார். தமிழை தவிர எனது பாதை எந்த மாற்று வழித்தடத்திற்கும் செல்லவில்லை. அதுதான் தனக்கு இத்தனை ஆண்டுகள் பெருமையையும், புகழையும் பெற்று தந்தது என தெரிவித்தார்.

இந்த 50 ஆண்டுகளின் நிறைவுக்கான அர்த்தம் விரைவில் வெளியிடப்படும் என்றார். அது இந்த உலகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறினார். கடந்த 6 மாதங்களாக இந்த படைப்புக்காக தான் அதிக நேரத்தை செலவழித்து வருவதாகம், தன் பணம், மகிழ்ச்சி, பொழுதுபோக்கு என அனைத்தும் இந்த படைப்பில் செலுத்தியிருப்பதால் இது மகத்துவம் பெறும் என்றும், இந்த படைப்பை விரைவில் வெளியிட உள்ளதாகவும் வைரமுத்து அறிவித்தார். பின்னர் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் கவிதைப்போட்டியில் பரிசு பெற்றவர்கள் வைரமுத்துவுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாஜக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் – பாஜக சீனிவாசன்

Gayathri Venkatesan

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

G SaravanaKumar

பொள்ளாச்சியை தனி மாவட்டமாக்க வேண்டும்: ஈஸ்வரன்

Niruban Chakkaaravarthi