டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு இளம்பெண் பலியான விவகாரம்; மேலும் ஒருவர் கைது

டெல்லியில் காரில் இழுத்துச் செல்லப்பட்டு பலியான இளம் பெண் வழக்கில் மேலும் ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியின் காஞ்சவாலா என்ற இடத்தில் உள்ள சுல்தான்புரி பகுதியில் கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில்…

டெல்லியில் காரில் இழுத்துச் செல்லப்பட்டு பலியான இளம் பெண் வழக்கில் மேலும் ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியின் காஞ்சவாலா என்ற இடத்தில் உள்ள சுல்தான்புரி பகுதியில் கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 20 வயது இளம்பெண் ஒருவர், 13 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த கோர விபத்து ஆங்கில புத்தாண்டு தினத்தன்று நடந்தது.

ஈவண்ட் மேனேஜ்மென்ட் (Event Management) அலுவலகத்தில் பணிபுரியும் அந்த இளம்பெண் புத்தாண்டையொட்டி நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து தன் பணிகளை முடித்து விட்டு அதிகாலை 3 மணிக்கு வீடு திரும்பினார். ஸ்கூட்டியில் தனது தோழியுடன் சென்று கொண்டிருக்கும் போது கார் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் அவரின் உடல் காரில் சிக்கிய படி சில கி.மீ. தொலைவிற்கு இழுத்து செல்லப்பட்டுள்ளது.

சுமார் அப்பகுதியில் 4 முதல் 5 முறை வரை அந்த கார் சுற்றி சுற்றி வந்துள்ளது. மொத்தம் 13 கி.மீ. தொலைவுக்கு அந்த பெண்ணின் உடல் இழுத்து செல்லப்பட்டு உள்ளது. இதன்பின் வேறொரு இடத்தில் அந்த இளம்பெண்ணின் உடல் நிர்வாண கோலத்தில் மீட்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் காரில் இருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் டெல்லி மட்டும் இன்றி நாட்டையே உலுக்கியது. இந்நிலையில், இந்த வழக்கில் மேலும் ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள 5 பேரையும் காப்பாற்ற முயன்ற வழக்கில் அஷுடோஷ் என்பவர் தான் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார். அதேபோல், இந்த வழக்கில் தொடர்புடைய அன்கூஷ் கன்னா என்ற மற்றொருவரையும் டெல்லி போலீசார் தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.