முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

ரூ.122 கோடிக்கு ஏலம் போய் கின்னஸ் சாதனை படைத்த கார் நம்பர் பிளேட்..!

துபாயில் கார்களுக்கான நம்பர் பிளேட் ஏலம் நடத்தப்பட்டதில், P7 என்ற பதிவெண் கொண்ட காரின் நம்பர் பிளேட் 122 கோடி ரூபாய்க்கு ஏலம் போய், உலகிலேயே அதிக விலை மதிப்பு கொண்ட நம்பர் பிளேட் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது.

இஸ்லாமியர்கள் இன்னும் சிறிது நாட்களில் ரமலான் பண்டிகையை கொண்டாட உள்ளனர். அதற்காக ஒரு மாத காலம் இஃப்தார் நோன்பை கடைப்பிடித்து வருகின்றனர். இதனையொட்டி, உலக பட்டினியைப் போக்க முடிவு செய்த அந்நாட்டு ஆட்சியாளர் ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம், அதற்காக 100 கோடி உணவுகளைத் தயாரித்து வழங்கும் திட்டத்தை அறிவித்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தத் திட்டத்திற்கு நிதி திரட்டுவதற்காகப் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதில் மிக முக்கியமான ஒன்று, அந்நாட்டில் உள்ள கார்களுக்கு பேன்சியான நம்பர் பிளேட்கள் மற்றும் செல்போன் எண்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. இதற்காக நம்பர் பிளேட்களை ஏலம் விடும் பொறுப்பு எமிரேட்ஸ் ஆக்ஷன் என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த ஏலத்தில் நிறைய நம்பர் பிளேட்கள் இடம் பெற்றன. 10 இரட்டை இலக்க நம்பர்களான AA19, AA22, AA80, O71, X36, W78, H31, Z37, J57 மற்றும் N41 ஆகிய நம்பர் பிளேட்டும், மற்ற ஸ்பெஷல் நம்பர் பிளேட்களான Y900, Q22222 ஆகிய நம்பர்களும் ஏலத்திற்கு  வந்தன. இவை அனைத்தும் ஏலம் போன நிலையில், P7 என்ற பதிவெண் 122 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த 2008-ம் ஆண்டு அபுதாபியில் நடத்தப்பட்ட ஏலத்தில், ஒன்றாம் எண் கொண்ட நம்பர் 52.2 மில்லியன் திராம்ஸ், அதாவது ரூ116.3 கோடி என்ற விலையில் ஏலம் போனதில், உலகிலேயே இதுவரை அதிகபட்ச விலையில் ஏலம் போன நம்பர் பிளேட் என்ற சாதனையை படைத்திருந்தது.

ஆனால் தற்போது P7 என்ற பதிவெண் 122 கோடி ரூபாய்க்கு ஏலம் போய் அந்த சாதனையை முறியடித்துள்ளது. ஏலத்தின் ஆரம்பத்தில் 33 கோடி ரூபாய் நிர்ணயம் செய்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நம்பர் பிளேட் இறுதியாக 122 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு வாங்கப்பட்டிருந்தாலும், இதனை வாங்கியது யார் என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. இது தொடர்பான ஏல வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அதேபோல் செல்போன் எண் ஒன்றும் நான்கரை கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 220 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஏலம் மூலம் வசூலிக்கப்பட்ட பணம் முழுவதும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆட்சியாளரின் 100 கோடி ரூபாய் உணவு நன்கொடை திட்டத்திற்காக வழங்கப்படும் என தெறிவிக்கப்பட்டுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram