கஞ்சா வியாபாரியான பிரபல ரவுடி சேகரை வீட்டிற்குள் நுழைந்து மனைவி கண்முன்பாகவே வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை புறநகர்ப் பகுதியில் ரவுடிகளுக்கு இடையே நடந்துவரும் தொழில் போட்டியால் தொடரும் படுகொலை சம்பவங்கள் பொதுமக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகேயுள்ள தைலாவரம் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதான சேகர்.
இவர் மீது சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் 3 கொலை வழக்குகள், 6 கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகளில் சிக்கியதால் இவருக்கு எதிரிகள் அதிகம். இதனால் சந்துரு தன்னை எதிரிகள் எப்போது கொலைசெய்ய முயற்சிப்பார்களோ என்ற பயத்தில்தான் தலைமறைவாகவே இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மறைமலை நகர் தைலாபுரத்தில் உள்ள மாமியார் வீட்டிலிருந்த தன மனைவி வினிதா மற்றும் குழந்தையைப் பார்க்கச் சென்றிருந்தார். வீட்டிற்குள் தன குழந்தை மற்றும் மனைவியுடன் பேசிக்கொண்டே டி.வி பார்த்துக்கொண்டிருந்தார். பைக்குகளில் வந்த மர்ம கும்பல் திடீரென வீட்டிற்குள் நுழைந்தது. அந்த கும்பலைப் பார்த்ததும் அலறியடித்து வீட்டிற்குள் ஓடிச்சென்று அறைக்குள் கதவைப் பூட்டிக்கொள்ள முயற்சித்தார். அதற்குள் சேகரை சூழ்ந்துகொண்டு மர்ம கும்பல் தாங்கள் கொண்டுவந்த பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது.
தன் கண் முன்பாகவே கணவனை வெட்டுவதைப் பார்த்த சேகரின் மனைவி வினிதா கணவனைக் காப்பாற்ற முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் அவரின் கையிலும் வெட்டிவிட்டுத் தப்பி ஓடிவிட்டது. கொலையாளிகள் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மனைவி மற்றும் குழந்தையின் கண்முன்பாகவே துடி துடித்து உயிரிழந்தார். சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. கூடுவாஞ்சேரி போலீசார் சேகரின் உடலைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்விரோதம் காரணமாகவே இந்த படுகொலை சம்பவம் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இவரை எந்த கொலைக்கும்பல் படுகொலை செய்தது எனத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 19-ம் தேதி சோமங்கலம் போலீஸ் சரகத்திற்குப்பட்ட நடுவீரப்பட்டு ஊராட்சிமன்ற 7-வைத்து வார்டு உறுப்பினர் சதீஷை அதே பகுதியைச் சேர்ந்த கள்ளச்சாராய பெண் வியாபாரியான லோகேஸ்வரி என்பவர் தனது தொழிலுக்கு இடைஞ்சலாக இருப்பதாகக் கருதி தனது அடியாட்கள் மூலம் வெட்டிக்கொலைசெய்து அவரது வீடு வாசலிலேயே வீசிவிட்டுச் சென்ற கொடூர சம்பவம் நடந்தேறியது.
இந்தக்கொலை சம்பவம் நடந்து 7 நாட்களில் ரவுடி சேகர் பட்டப்பகலில் மனைவி கண்முன்பாகவே வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது சென்னை புறநகர்ப் பகுதி மக்களை கடும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளது.







