“தமிழர்கள் என்றாலே பாஜக அரசுக்கு கசக்கிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே மத்திய அரசு வாடிக்கையாக வைத்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.134 கோடி மதிப்பில் 150 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் பல்வேறு துறைகளின் சார்பில் 50,752 பயனாளிகளுக்கு ரூ.426 கோடி மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து 55000 பேருக்கு ரூ.426 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதனைத்தொடந்து ராமநாதபுரம் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை அறிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், ஒரு காலத்தில் இராமநாதபுரத்தை தண்ணீர் இல்லாத காடு என்று அழைப்பார்கள். அந்த நிலைமையை மாற்றியது கலைஞர் தலைமையிலான திமுக அரசு. பல பெருமைகள் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். ராமநாதபுரம் நெஞ்சை அள்ளும் அழகிய கடற்கரை மாவட்டம். நான் முதல்வன் திட்டத்தில் 55 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். 614 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது திமுக அரசு.

தற்பொழுது விரிவு படுத்தப்பட்ட கூட்டு குடிநீர் திட்ட பணி டிசம்பர் மாதத்தில் நிறைவுபெறும். இதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2,85,000 பேர் பயனடைய உள்ளன. கச்சத்தீவை தர மாட்டோம் என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் கூறுகிறார். இது குறித்து மத்திய அமைச்சர் ஏதாவது பதில் கூறியிருக்க வேண்டுமா, வேண்டாமா? தமிழர்கள் என்றாலே பாஜக அரசுக்கு கசக்கிறது.

ஜிஎஸ்டி யால் நிதி உரிமை போச்சு. மத்திய பாஜக அரசு மீனவர்களை காக்க எதுவும் செய்யவில்லை. மானிய டீசல் அளவு உயரும், தமிழகத்திற்கு எந்தவித சிறப்பு திட்டத்தையும் பாஜக அரசு அறிவிக்கவில்லை. பள்ளி கல்விக்கான நிதி உதவினை பாஜக அரசு தர மறுக்கிறது. தமிழகத்திற்கு வஞ்சகம் செய்வதையே மத்திய அரசு வழக்கமாக வைத்துள்ளது.

பிரதமர் பெயரில் ஒன்றிய அரசின் திட்டங்களுக்கும் நாம்தான் படி அளக்க வேண்டியுள்ளது. பாஜக ஒரு ஒட்டுணி. அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது, அரசியல் ஆதாயத்திற்காகவே பாஜக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மூன்று முறை பேரிடர் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட போது நிதி தராத, உடனே வராத நிதியமைச்சர் கரூர் மட்டும் உடனே வருகிறார்.

பாஜகவை, அதிமுக ஆதரிப்பதற்கு ஏதாவது கொள்கை இருக்கா? மாநிலங்களே இருக்கக் கூடாது என பாஜக செயல்படுகிறது. தமிழக மக்களின் நலனை ஆதரிக்கும் யாரும் பாஜக கூட்டணிக்கு செல்ல மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.