தன் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று அண்ணா பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தவர் சூரப்பா. இவருக்கு எதிராகக் கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து, தமிழக அரசு, கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.
இந்த ஆணையம் அவரிடம் விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் சூரப்பாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர், தனது தரப்பு விளக்கத்தை வழக்கறிஞர் வாயிலாகச் சமர்ப்பித்துள்ளார்.
தன் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்றும் தனக்கு எதிரான ஊழல், முறைகேடு புகார்களை முற்றிலும் மறுக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து இறுதி அறிக்கையை தயாரிக்கும் பணியில் விசாரணை ஆணையம் ஈடுபட்டுள்ளது. ஓரிரு நாட்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்.







