சிவகங்கை மாவட்டம் கீழடியில் 9 ஆம் கட்ட அகழாய்வு பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் தமிழர் பண்பாட்டை வெளிக்கொண்டு வரும் வகையில் பல்வேறு பண்டைய கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில், தமிழர் பண்பாட்டை எடுத்துக்காட்டும் வகையில், சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்திய தொல்லியல் துறை சார்பில் 3 கட்டமாக அகழாய்வு பணிகளும், தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் 5 கட்டமாக அகழாய்வு பணிகளும் என 8 கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்த நிலையில் கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய 3 இடங்களில் 9-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் இன்று தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது. கீழடியில் 110 ஏக்கரில் உள்ள தொல்லியல் மேட்டில் 2014ஆம் ஆண்டு முதல் இந்த அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த அகழாய்வுப் பணிகளின் போது சூது பவளம், உறை கிணறுகள், முதுமக்கள் தாழி, தமிழ் பிராமி எழுத்துக்கள், தங்கம், வெள்ளி, இரும்பு, பாசி மணிகள், கண்ணாடி பாசிமணிகள், பானைகள், செங்கல், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பகடைக்காய் உள்ளிட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் 2,600 ஆண்டுகளுக்கு முன் நகர நாகரீகம் இருந்துள்ளது உறுதியாகி உள்ளது. அகழாய்வில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன. சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் சிறுவர்கள்-பெண்கள் விளையாடும் சில்லு வட்டுகள், மனித உருவம் கொண்ட சுடுமண் சிற்பம், பழங்கால இரும்பு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
கண்டெடுக்கப்பட்ட இந்த அணைத்து பொருட்களையும் பொதுமக்கள், வரலாற்று ஆய்வாளர்கள், பள்ளி மாணவ மாணவிகள் பார்க்கும் பயன்பெறும் வகையில் கீழடியில் அருங்காட்சியம் அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் நேரில் சென்று திறந்து வைத்தார். தற்போது இந்த அருங்காட்சியகத்தை ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கீழடி அகழாய்வு பணிகள் வழக்கமாக ஜனவரி மாதம் தொடங்கி செப்டம்பரில் முடிவடையும். ஆனால் அருங்காட்சியக பொருட்களை காட்சி படுத்தும் பணிகள் காரணமாக, அது காலதாமதமாகி வந்த நிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலமாக 9-ஆம் கட்ட அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார்.
கீழடியில் நடந்த அகழாய்வு பணிகள் தொடக்க நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி மற்றும் அரசு அலுவலர்கள், தொல்லியல் துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பி.ஜேம்ஸ் லிசா