திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாளின் 45 ஆவது பிறந்தநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
தமிழகத்தில் உள்ள சைவ வைணவ ஆலயங்களில் ராஜ மரியாதையோடு யானை முன் செல்ல, இறைவனே யானைக்கு பின்பு தான் ஊர்வலமாக வரும் வழக்கம் தமிழகத்தில் பண் நெடுங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆலயங்களில் வருடத்தில் ஒரு நாள் நடைபெறும் திரு தேரோட்டம் முதற்கொண்டு தெப்ப திருவிழா, சிறப்பு அபிஷேக ஆராதனை, நாள்தோறும் நடைபெறும் மூன்று கால பூஜை என்று எல்லாவற்றிலும் இன்றியமையாது கலந்து கொள்வது திருக்கோவிலில் உள்ள யானை மட்டுமே.
அத்தகைய சிறப்பு வாய்ந்த யானைகளுக்கு மரியாதை செலுத்துவது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அவற்றை ஆலயத்தின் மிக முக்கிய பொருளாக பாதுகாப்பதோடு, நாள்தோறும் முதல் மரியாதை செய்து வருடம் தோறும் யானையின் பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வழக்கம் தமிழகத்தில் தொடர்ந்து இருந்த வருகிறது.
அந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் உள்ள யானை ஆண்டாளுக்கு 45 ஆவது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் உள்ள திருக்குளத்தில் குளித்த பின்னர் விழா மேடைக்கு அழைத்து வரப்பட்ட யானை ஆண்டாளுக்கு பலவகை பழங்கள் வழங்கப்பட்டன.
1979-ஆம் ஆண்டு பொள்ளாச்சி வனப்பகுதியில் பிறந்த யானை ஆண்டாளை காரமடை அரங்கநாத சுவாமி கோயிலுக்கு தொழிலதிபர் ஒருவர் வழங்கினார். அதன் பின்னர் ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு கை சேவை மேற்கொள்வதற்காக 1986-ஆம் ஆண்டு யானை ஆண்டாள் வரவழைக்கப்பட்டது. இக்கோயிலுக்கு அழைத்து வரப்பட்ட முதல் நாளிலே தங்க குடத்தில் புனித நீரோடு ஆண்டாள் கோயிலுக்கு யானை ஆண்டாள் அழைத்து வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா








