ராமஜெயம் கொலை வழக்கு விவகாரம் தொடர்பாக மூன்றாம் கட்டமாக 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு திருச்சியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கு உடனடியாக திருச்சி போலீசார் விசாரணையில் இருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன் பின்னர் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. பல கட்ட விசாரணைகள் நடந்தும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாததால், தமிழக அரசு இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்கவும் சிபிஐயின் விசாரணைக்கு உதவுவதற்காகவும் சிபிசிஐடியின் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தனர். சிறப்பு புலனாய்வு குழுவின் எஸ்பியாக சிபிசிஐடியின் எஸ்பி ஜெயக்குமார் நியமிக்கப்பட்டார். பத்துக்கும் மேற்பட்ட டிஎஸ்பிக்கள் அடங்கிய குழுவானது விசாரணையை துரிதப்படுத்தியது.
ராமஜெயம் கொலை நடந்த காலகட்டத்தில் சந்தேகப்படும் படியான பிரபல ரவுடிகள் 12 பேரின் செல்போன் இணைப்புகள் ஆக்டிவாக இருந்ததை அடிப்படையாகக் கொண்டு விசாரணையை துவக்கினர். இந்த 12 பேரையும் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த கோரி திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றம் இதற்கு அனுமதி அளித்தது.
அதன் அடிப்படையில், முதற்கட்டமாக 4 பேரிடம் சுமார் 8 மணி நேரமாக உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்ட நிலையில், இரண்டாவது கட்டமாக கலைவாணன், செந்தில், திலீப் ஆகியோரிடம் மயிலாப்பூரில் நேற்று உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்றது . இந்த சோதனையில் கூடுதலாக சுரேந்தர் என்பவரும், முதற்கட்ட சோதனையில் ஈடுபடுத்தப்பட்ட சத்யராஜ் என்பவரும் மீண்டும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், சாமி ரவி, சிவா, ராஜ்குமார், மாரிமுத்து ஆகிய நான்கு பேரிடம் மூன்றாம் நாளான இன்று உண்மை கண்டறியும் சோதனை சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் அறிவியல் கூடத்தில் நடைபெற்று வருகிறது
ஏற்கனவே திண்டுக்கல் மோகன்ராம்,நரைமுடி கணேஷ், தினேஷ், சத்யராஜ், கலைவாணன் செந்தில், திலீப், சுரேந்தர் ஆகிய எட்டு பேரிடம் கடந்த இரண்டு நாட்களில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த உண்மை கண்டறியும் சோதனையானது நிபுணத்துவம் பெற்ற தடவியல் நிபுணரான மோசஸ் தலைமையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.