மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு எடுக்கும் முயற்சிகளை, அனைத்து வடிவிலும் தமிழ்நாடு அரசு எதிர்க்கும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையில் கடந்த 18 மற்றும் 19ம் தேதிகளில் 2022-23ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதனையடுத்து இன்று காலை 10 மணியிலிருந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
சட்டப்பேரவையில், மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை எதிர்த்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு அனைத்து கட்சியும் ஆதரவு தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாகப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மேகதாது அணை குறித்து தனி தீர்மானம் கொண்டு வந்ததாகவும், முன்னுரையிலேயே பல்வேறு வரலாற்றைப் பதிவிட்டுப் பேசியதாகவும் கூறினார்.
மேலும், தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றி இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும் இந்த தீர்மானத்தை ஒருமனதாக அளித்தமைக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துக்கொண்டார். மேகதாது அணையைக் கர்நாடகாவில் கட்ட அனுமதி தருவதை நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறிய அவர், நடுவர் மன்றத் தீர்ப்புக்கும், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கும் எதிராகக் கர்நாடக அரசு மேற்கொண்டு வரக்கூடிய நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு நிச்சயம் தடுக்கும் என்று உறுதியளித்தார். மேலும் தமிழர்களின் நலனை அரசு நிச்சயம் பாதுகாப்பதோடு, ஒன்றுபட்டு நின்று நிச்சயம் வெற்றி பெறுவோம் எனவும் தெரிவித்தார்.







