மதுரையில் துணிவு மற்றும் வாரிசு படங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்வதாக குற்றம்சாட்டி ரசிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாளை விஜய் நடித்துள்ள வாரிசு படமும், அஜித் நடித்துள்ள துணிவு படமும் தமிழ்நாடு முழுவதும் வெளியாகவுள்ளது. இதனால் இரு நடிகர்களின் ரசிகர்களும் இன்று முதலே கொண்டாட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய், அஜித் படங்கள் நேரடியாக மோதவுள்ளதால், இந்த இரண்டு படங்களின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் உச்சத்தை தொட்டுள்ளது. விஜய்யின் வாரிசு திரைப்படம் ஃபேமிலி செண்டிமெண்ட் படமாகவும், அஜித்தின் துணிவு திரைப்படம் ஆக்ஷன் படமாகவும் உருவாகியுள்ளதால், இந்த பொங்கல் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் என்றே கூறவேண்டும்.
இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் அமைந்துள்ள இரு தியேட்டர்களில் நாளை அஜித் நடித்த துணிவு திரைப்படமும், விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்த இரு திரைப்படத்திற்கும் ரூ.500 முதல் 1000 வரை டிக்கெட் கட்டணம் வசூல் செய்வதாக குற்றம்சாட்டி, திரையரங்கு முன்பு ரசிகர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.







