சம்பாதிப்பதிலும் சாதனை.. சரிவிலும் சாதனை..- எலான் மஸ்க்கின் கின்னஸ் சாதனை

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க்  தனது வருமானத்தை ஈட்டுவதில் பெரிய சாதனைகளை படைத்து போல தற்போது சொத்துக்களை இழப்பதிலும்  சாதனை புரிந்துள்ளர். அதுவும் கின்னஸ் சாதனை. அவரது சொத்து மதிப்பு கடந்த 2021…

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க்  தனது வருமானத்தை ஈட்டுவதில் பெரிய சாதனைகளை படைத்து போல தற்போது சொத்துக்களை இழப்பதிலும்  சாதனை புரிந்துள்ளர். அதுவும் கின்னஸ் சாதனை. அவரது சொத்து மதிப்பு கடந்த 2021 நவம்பர் மாதம் முதல் தற்போது வரை சுமார் 15 மாதங்களில் சுமார் 15 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு சொத்துமதிப்புக்களை இழந்துள்ளார்.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் உலகின் பணக்காரர் வரிசையில் முதல்  இடத்தில் இருந்தவர். சமீபத்தில் ஏற்பட்ட தொடர் நஷ்டம் மற்றும் சொத்து இழப்பு காரணமாக முதல் இடத்திலிருந்து பின்னுக்கு தள்ளப்பட்டார். கடந்த சில வருடங்களாகவே அவரது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் தொடர் சரிவை சந்த்தித்தன.

இந்நிலையில்தான் சமீபத்தில் சமூக வலைதள நிறுவனமான டிவிட்டரை விலைக்கு  வாங்கி  அந்நிறுவனத்தில் அதிரடியான பல மாற்றங்களை கொண்டு வந்ததால் பெரும் சர்ச்சையை சந்தித்தார். மேலும் அவரது டெஸ்லா நிறுவனம் தொடர்ந்து சரிவை சந்தித்த நிலையில் கடந்த 2021 நவம்பர் முதல் இதுவரை கிட்டதட்ட 183 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு சொத்துக்களை இழந்துள்ளார்.

கடந்த 2000ம் ஆண்டு  சாஃப்ட் வங்கி நிறுவனரும் ஜப்பானிய தொழில் முதலீட்டாளருமான மசயோஷி சன் என்பவர் கிட்டத்தட்ட 58.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டத்தை சந்தித்தார்.  தற்போது மசயோஷி சன்னை விட பல மடங்கு நஷ்டத்தை எலான் மஸ்க் சந்தித்துள்ளார்.   இதன்  மூலம் குறுகிய காலத்தில் அதிக சொத்துக்களை இழந்தவர் என்கிற அடிப்படையில் அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

எலான் மஸ்கின் சொத்து மதிப்பு நவம்பர் 2021இல் 320 பில்லியன் அமெரிக்க டாலராக அதாவது இந்திய ரூபாய் மதிப்புபடி 26 லட்சத்து 16 ஆயிரத்து 640 கோடியாக இருந்தது. அந்த சொத்து மதிப்பு  ஜனவரி 2023 நிலவரப்படி 137 பில்லியன் அமெரிக்க டாலராக அதாவது இந்திய ரூபாய் மதிப்புபடி 11 லட்சத்து 20 ஆயிரத்து 249 கோடியாக குறைந்துள்ளது. சுமார் 15 மாதங்களில் 14 லட்சத்து 96 ஆயிரத்து 391 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை எலான் மஸ்க் இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.