பாஜக தலைவர் அண்ணாமலை கடந்து வந்த பாதை

தமிழ்நாடு பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலை கடந்து வந்த பாதையை தற்போது காண்போம். அரசியலில் சேர்ந்தவர்கள் எத்தனை பேருக்குச் சரியான அங்கீகாரம் கிடைக்கிறது? படிப்படியாக உயர்ந்தவர்கள் சிலர், குடும்ப அரசியல் பின்னணியால் உயர்ந்தவர்கள் சிலர்,…

தமிழ்நாடு பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலை கடந்து வந்த பாதையை தற்போது காண்போம்.

அரசியலில் சேர்ந்தவர்கள் எத்தனை பேருக்குச் சரியான அங்கீகாரம் கிடைக்கிறது? படிப்படியாக உயர்ந்தவர்கள் சிலர், குடும்ப அரசியல் பின்னணியால் உயர்ந்தவர்கள் சிலர், ஆனால் எவ்வித அரசியல் பின்னணியும் இல்லாமல் அண்ணாமலை போன்ற ஒரு சிலர்தான் வெகு சீக்கிரத்தில் கோலோச்சிக்கிறார்கள்.

ஆம், 37 வயதேயான முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, தமிழ்நாடு பாஜகவின் தலைவராக பொறுப்பேற்றிருப்பது உழைப்பிற்குக் கிடைத்த உயர்வே என்று சொல்லலாம்.

கரூர் மாவட்டம், தொட்டம்பட்டிக் கிராமத்தில் 1984ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி பிறந்த அண்ணாமலை, இளங்கலையில் பொறியியல்படிப்பும் மற்றும் எம்பிஏ பட்டப்படிப்பும் முடித்தவர். பின் காவல்துறையில் சேர வேண்டும் என்று விருப்பதில் படித்து ஐபிஎஸ் அதிகாரியானர். 2011 ஐபிஎஸ் கேடரைச் சேர்ந்த அவர். உடுப்பி மற்றும் ராமா நகர் மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளராகவும் பின் பெங்களூருவில் காவல்துறையின் துணை ஆணையராகவும் பணியாற்றிவந்தார்.

வேலையில் துணிச்சல், யாருக்கும் அடிபணியாத கோட்பாடு, இப்படி சிங்கம் சூர்யாவைப் போல் மிடுக்கான காவல் அதிகாரியாக வலம் வந்தார் அண்ணாமலை. மாணவர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இவரது பாணி இளைஞர்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்றது.

ஒன்பது ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றிய பின் அரசியலில் ஈடுபடும் எண்ணத்தோடு, கடந்த 2019ம் ஆண்டு காவல்துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். அதன்பின் 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கினார். பாஜக அவரின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக, கட்சியில் இணைந்த சில நாட்களிலேயே மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

அதையடுத்து, வந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் தோல்வி அடைந்தாலும் 68,550 வாக்குகளைப் பெற்று களத்தில் கடும் போட்டியாளராகவே இருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல். முருகன், மத்திய அமைச்சரானதையடுத்து, தமிழ்நாடு பாஜக தலைவராக யார் வருவார் என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், ஹெச். ராஜா, கரு.நாகராஜன், கருப்பு முருகானந்தம் என கட்சியின் மூத்த தலைவர்கள் பலரது பெயர்கள் உத்தேசப் பட்டியலில் இடம்பெற்றன.

இந்நிலையில் ஒரு இளம் தலைவரை கமலாலயத்திற்கு தலைவராக தேர்ந்தெடுத்திருக்கிறது பாஜக தேசிய தலைமை. 37 வயதே ஆன அண்ணாமலை தமிழ்நாடு பாஜகவின் தலைவராக அறிவிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற பல்வேறு கனவுகளை பாஜக சுமந்து நிற்கும் நிலையில் அண்ணாமலையின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் உற்றுநோக்க தயாராகி விட்டது தமிழ்நாடு அரசியல்களம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.