அரசு பள்ளி மாணவர்களுக்கு டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறுபவர்களுக்கு சர்வதேச சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகளை காணும் வாய்ப்பு ஏற்பாடு செய்து தரும் அமைத்துள்ளோம் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
சென்னை ஓபன் 2022 உலக மகளிர் டென்னிஸ் போட்டிகளுக்கான அறிமுக நிகழ்வு மற்றும் செய்தியாளர் சந்திப்பு சென்னை எம் ஆர் சி நகர் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், துறை செயலாளர் அபூர்வா தமிழ்நாடு டென்னிஸ் கூட்டமைப்பின் தலைவர் விஜய் அமிர்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய அமைச்சர் மெய்யநாதன், “மீண்டும் ஒரு விளையாட்டு திருவிழாவுக்கு தமிழ்நாடு தயாராகி இருக்கிறது. 1970 களில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த, இன்று உலக அளவில் டென்னிஸ் போட்டிகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்திருப்பது விஜய் அமிர்தாஜுக்கு பெருமை சேரும். இந்த போட்டிகளை நடத்த 5 கோடி ரூபாய் ஒதுக்கி சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு பின்பு தற்போது நடைபெறுகிறது” என்று தெரிவித்தார்.
மேலும், “வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி முன்பாக ஏற்பாடுகள் அனைத்தும் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 10,11ஆம் தேதி இந்திய வீராங்கனைகள் தேர்வு நடைபெறவுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளைச் சார்ந்த வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர். ஒலிம்பியாட் போட்டிகளை போலவே, வர இருக்கிற வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு விருந்தோம்பல் குறித்து கவனம் செலுத்தப்படும். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை போலவே, அரசு பள்ளி மாணவர்களிடையே டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறுபவர்கள் அனைவரையும் அழைத்து வந்து, சர்வதேச சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகளை காணும் வாய்ப்பு ஏற்பாடு செய்து தரும் முயற்சியில் உள்ளோம்” என தெரிவித்தார்.







