சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் செப்டம்பர் மாதம் முதன் முறையாக சென்னை ஓபன் WTA 250 மகளிர் டென்னிஸ் விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது.
சென்னை ஓபன் WTA 250 மகளிர் டென்னிஸ் விளையாட்டு போட்டிகள் சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கத்தில், வரும் செப்டம்பர் மாதம் முதன் முறையாக நடைபெறவுள்ளது. இதற்கான தகுதி போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 10 மற்றும் 11 ஆம் தேதி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகள் வரும் செப்டம்பர் 12 முதல் 18 வரை நடத்தப்படும். செப்டம்பர் 18 ஆம் தேதி சென்னை ஓபன் 2022 இறுதிப் போட்டிகள் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகையாக 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்கா டாலர்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் இதற்கான அறிமுக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ மெய்யநாதன் மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவர் விஜய் அமிர்தராஜ் ஆகியோர் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறையின் முதன்மை செயலாளர் அபூர்வா ஐ ஏ எஸ், துறை சார்ந்த செயலாளர் கார்த்திகேயன், மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமைச்சர் மெய்யநாதன் காணொளி வாயிலாக பங்கேற்று பேசுகையில், இந்த போட்டியினை உலக அளவில் கவனம் ஈர்க்க வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் எண்ணுவதற்கு இணங்க, இதை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் விளையாட்டு அரங்கில் மகளிருக்கான சென்னை ஓபன் டென்னிஸ் 2022 போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்த போட்டிகள் தமிழ்நாடு மற்றும் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் நடத்தி முடிக்கப்படும். இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த உலக டென்னிஸ் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கு நன்றி என்று கூறினார்.
அபூர்வா ஐ ஏ எஸ் பேசுகையில், இந்த போட்டிகள் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் உத்வேகத்தை அளிக்கும். பெண்களுக்காக டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுவதால், இந்த போட்டி நம் உணர்வுகளோடு கலந்த ஒன்றாக பார்க்கப்படும்.
தொடர்ந்து விஜய் அமிர்தராஜ் பேசுகையில், சானியா மிர்சாவுக்கு இந்த ஆண்டுடன் ஓய்வு அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவருக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு,
சானியா மிர்சாவின் பங்கேற்பு உறுதி செய்யப்பட்ட பின், ஓய்வு அறிவிக்கப்பட்டால் நிச்சயம் அவருக்காக சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்தியாவின் முதல் தரத்தில் உள்ள டென்னிஸ் வீராங்கனைகள் இதில் பங்கேற்க உள்ளனர்.
சர்வதேச கால அட்டவணைகள் பொறுத்து, தமிழ்நாட்டில் ஆடவருக்கான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் மீண்டும் அடுத்த வருடம் நடத்த திட்டமிடப்படும் என அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக துறை சார்ந்த முதன்மை செயலாளர் அபூர்வா ஐ ஏ எஸ் செய்தியாளர் சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், சென்னையில் முதல்முறையாக பெண்களுக்கான டென்னிஸ் போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் அதிகமான பெண்கள் விளையாட வேண்டும் என்பதற்காகவும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. கடந்த காலங்களில் மகளிர், விளையாட்டு துறையில் அதிகப்படியான சாதனைகளை புரிந்து வருகிறார்கள். சமீபத்தில் கூட ஜெர்லின் அணிகா பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கம் வென்று சாதனை படைத்தார்.
(சினிமா நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே நேரு விளையாட்டு அரங்கம் வழங்கப்படுகிறது, வீரர்கள் பயிற்சி பெற வழி இல்லை என்ற குற்றம் எழுந்து வருகிறது என்ற கேள்விக்கு)
நேரு உள் விளையாட்டு அரங்கம் பயிற்சிக்கான அரங்கம் அல்ல, அது விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான அரங்கம். தமிழ்நாட்டில் ஒலிம்பிக் அகாடமி துவங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் அறிவிப்புகள் வெளியாகும்.அடுத்த மாதம் தமிழகத்தில் தேசிய அளவிலான ஜூனியர் டென்னிஸ் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.









