மின்சாரக் கட்டணம் அதிகம் செலுத்துகிறீர்களா? இதைப் படிங்க முதல்ல..!

டிவி, ஏசி, ஹோம் தியேட்டர் என மின்சாதனங்களின் பயன்பாடு இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். அதுவும் கொரோனா காலகட்டத்தில் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கியதால் எப்போதும் மின்விசிறி, ஏசி இயங்கிக் கொண்டே இருந்ததால் மின்சாரக்…

டிவி, ஏசி, ஹோம் தியேட்டர் என மின்சாதனங்களின் பயன்பாடு இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். அதுவும் கொரோனா காலகட்டத்தில் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கியதால் எப்போதும் மின்விசிறி, ஏசி இயங்கிக் கொண்டே இருந்ததால் மின்சாரக் கட்டணமும் எக்கச்சக்கமாக எகிறி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது.

டிவி முதல் ஏசி வரை அனைத்துக்கும் ரிமோட் கன்ட்ரோல் இருப்பதால் அதன்மூலமாக அவற்றை நாம் ஆஃப் செய்துவிட்டு அத்துடன் விட்டு விடுகிறோம். அவ்வாறு விடுவதாலும் ரீடிங் ஓடிக் கொண்டே இருக்கும் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதனால், மின்சாரக் கட்டணமும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

கடந்த ஆண்டு, “பயன்படுத்தாத மின்சாரத்திற்கு கட்டணம் செலுத்துகிறோம், வீட்டில் ஆட்களே இல்லாதபோதும் மின்சார கட்டணம் அதிகமாக இருந்தது” போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது போன்ற நிலைகள் ஒருபுறம் இருக்க, நமது கவன குறைவால் பயன்படுத்தாத மின்சாரத்திற்கு கட்டணம் செலுத்தி வருவதாக சமீபத்திய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

மின்சார பயன்பாடு தொடர்பாக 7 மாவட்டங்களில் சிட்டிசன் கன்சியூமர் அண்ட் சிவிக் ஆக்சன் குரூப் ஆய்வு நடத்தியது. இதில் 70 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகளில் டி.வி.,செட்டாப் பாக்ஸ், ஏ.சி, ஹோம் தியேட்டர் உள்ளிட்ட வீடு உபயோக பொருட்களை முழுமையாக அணைக்காமல் இருப்பதால் அதன் மூலம் மின்சாரம் வீணாவது தெரியவந்துள்ளது. இதனால் பயன்படுத்தாத மின்சாரத்திற்கும் சேர்த்து கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக டி.வி, ஏ.சி உள்ளிட்ட சாதனங்களை முழுமையாக அணைக்காமல் ரிமோட் மூலம் அணைப்பதால் அதிகளவு மின்சாரம் நுகர்ப்படுகிறது. பயன்பாட்டில் உள்ள சாதனங்களை காட்டிலும் இது அதிகளவு மின்சாரத்தை உறிஞ்சுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 1000 ரூபாய் கட்டணம் செலுத்தும் அளவிற்கு மின்சாரம் வீணாகிறது.174 யூனிட் மின்சார இழப்பு ஏற்படுவதாகவும், இதை பயன்படுத்தி இரண்டு எல்இடி பல்புகளை ஒரு ஆண்டு முழுவதும் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

சிட்டிசன் கன்சியூமர் அண்ட் சிவிக் ஆக்சன் குரூப்பின் மூத்த ஆராய்ச்சியாளர் விஷ்ணு ராவ் பேசுகையில், “மின்சாரத்தை சரியாக பயன்படுத்த தவறுவதால் கடுமையான மின்சார இழப்பு ஏற்படுகிறது” என்று தெரிவிக்கிறார். மேலும் இதுகுறித்த பேசிய மின்வாரிய அதிகாரிகள், இதுபோன்று மின்சாதனங்களை முழுமையாக அணைக்காமல் இருப்பது டிரான்ஸ்பார்மருக்கு கூடுதல் சுமையை கொடுக்கும் என தெரிவிக்கின்றனர்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.