ஆந்திராவில் உயர்மின் அழுத்த கம்பி அறுந்து ஆட்டோ மீது விழுந்ததில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தை சின்ன கொண்டாளப்பள்ளி கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்கள் விவசாய பணிக்காக ஆட்டோவில் இன்று காலை சென்று கொண்டிருந்தனர். ஆட்டோவில் மொத்தம் 9 பேர் பயணித்தனர். சாலையில் தொழிலாளர்களுடன் ஆட்டோ சென்று கொண்டிருந்த போது அந்த பகுதியில் உள்ள உயர்மின் கம்பி திடீரென அறுந்து ஆட்டோ மீது விழுந்ததுள்ளது.
இதனால் ஆட்டோ முழுவதும் உடனடியாக மின்சாரம் பாய்ந்து தீப்பற்றி எரிய தொடங்கிய தொடங்கியது. கண் இமைக்கும் நேரத்தில் ஆட்டோ முழுவதும் தீ மளமளவென பற்றி கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதில் ஆட்டோவில் பயணித்த 8 பேர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். லட்சுமி என்ற பெண் மின்சாரம் தாக்கி பலத்த தீ காயங்களுடன் தூக்கி வீசப்பட்டார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடனடியாக மின் இணைப்பை துண்டித்து படுகாயம் அடைந்த பெண்ணை மீட்டு பத்தலப்பள்ளி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து உள்ளனர்.
மேலும் இந்த விபத்தின் போது ஆட்டோவை ஓட்டி வந்த பொதுலைய்யா என்பவர் தன்னை தற்காத்துத் கொள்ள ஆட்டோவில் இருந்து குதித்து தப்பியுள்ளார். அவரை போலீசார் அழைத்து சென்று விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமும் வழக்கம் போல் வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி இறந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.








