தென்காசி மாவட்டம் மேலக்கடையநல்லூரில் சாமி சிலையின் கண் திறந்ததாக வந்த தகவல் காட்டுத்தீபோல் பரவியதால் ஊர் பொதுமக்கள் திரண்டு வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தென்காசி மாவட்டம் மேலக்கடையநல்லூரில் பண்பொழி-கடையநல்லூர் நெடுஞ்சாலையின் ஓரமாக சந்தனமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் பிரசத்தி பெற்ற தலமாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஏப்ரல்-மே மாதங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கமாகும். கடந்த சில நாட்களுக்கு முன்பு இக்கோயிலின் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் நேற்றிரவு கோயில் பூசாரி வழக்கம்போல் அன்றாட பூஜைகளை முடித்துவிட்டு கோயில் நடையை அடைத்து செல்ல முயன்ற போது சந்தனமாரியம்மன் சிலை கண் திறப்பது போல் தெரிந்துள்ளது.
பூசாரி ஊர் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த மக்கள் அனைவரும் அம்மன் கண் திறக்கும் காட்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஊர் பொதுமக்கள் கூடி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர்.
– வேந்தன்







