முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்

தமிழ் கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை


ஆர்.கே.மணிகண்டன்

கட்டுரையாளர்

திருச்செந்தூரில் தமிழ் கடவுளான முருகனுக்கு, தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் இன்று முதல் தொடங்கியது.

கடவுளுக்கு சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்ய வேண்டுமா? தமிழில் செய்யக் கூடாதா? என்ற சர்ச்சை நீண்ட காலமாக தொடர்ந்தது. இந்நிலையில், 1970-ம் ஆண்டு, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்திற்கான சட்டத்தை கொண்டு வந்தார், அப்போதைய முதலமைச்சரான கருணாநிதி. இதையடுத்து, திருச்செந்தூர், பழனி, மதுரை, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில், தலா ஒரு பாடசாலை அமைக்கப்பட்டு, அனைத்து சாதியினருக்கும் தமிழ் மற்றும் சமஸ்கிருத முறைப்படி அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்த நிலையில், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டம், அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 6-ம் தேதி முதல், கோயில்களில் தமிழில் அர்ச்சனை தொடங்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதையடுத்து, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், இத்திட்டம் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. முதல்கட்டமாக தமிழ்நாட்டில் 47 கோயில்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழில் அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்வதை ஊக்கப்படுத்தும் வகையில், 12 இறைவன் போற்றி பாடல் நூல்களை, கடந்த 12-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதனிடையே, உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டத்தின் மூலம், இன்று முதல் தமிழ் அர்ச்சனை வழிபாடு தொடங்கியுள்ளது.

தமிழ் கடவுள் முருகனுக்குரிய ஆறுபடை வீடுகளில், திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற 5 கோயில்களும் மலைக்கோயிலாக அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயிலாகும்.

சூரசம்ஹாரத் திருவிழாவின் போது, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து முருக பக்தர்கள், திருச்செந்தூர் கடற்கரையில் திரள்வது வழக்கம். அப்போது, “வெற்றிவேல், வீரவேல்” என்ற தமிழ் முழக்கம் விண்ணதிர எழுப்பப்படுவது வழக்கம். மேலும், வெளியூர்களில் இருந்து குழுவாக, திருச்செந்தூருக்கு நடைப்பயணமாக வரும் பக்தர்கள், தமிழில் முருகன் பாடல்களை இசையுடன் பாடியபடி வருவதும் வழக்கமானதே. இந்நிலையில், தமிழ் கடவுளுக்கு தமிழிலேயே அர்ச்சனை என்பது, குறிப்பாக முருக பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் போன்ற இனிப்பான செய்தியாகும்.

Advertisement:
SHARE

Related posts

கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

Gayathri Venkatesan

விவசாயி உயிரிழந்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!

Gayathri Venkatesan

பெகாசஸ் ஒட்டுகேட்பு புகார் பொய்யானது: பாஜக தலைவர் அண்ணாமலை

Gayathri Venkatesan