கோயில்களில் திருமணம் நடத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை தொட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. திருவிழா மற்றும் மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் வழிபாடுகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திருமணத்தில் 100 பேர் வரை மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோயில்களில் திருமணம் நடத்துவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கோயில்களில் நடக்கும் திருமணத்தில் 10 நபர்களுக்கு மேல் அனுமதி கிடையாது, கோயில் மண்டபங்களில் நடைபெறும் திருமணத்திற்கு 50 நபர்களுக்கு மேல் அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் மட்டுமே திருமணம் நடைபெற வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும், திருக்கோவில் அத்தியாவசிய பூஜைகளில் அந்தந்த கோவில் நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்வார்கள் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







