தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டி.ஆர்.எஸ்) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது, தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி சார்பில், மகபூபாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மலோத்து கவிதா (Malothu Kavitha). தேர்தல் நேரத்தில், இவருக்கு வாக்களிக்கக் கூறி வாக்களர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ததாக, சவுகத் அலி என்பவர் கையும் களவுமாக பிடிபட்டார்.
இதுதொடர்பான வழக்கு எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணையில் மலோத்து கவிதாவுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது உறுதியானது.
இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம், மலோத்து கவிதா எம்.பி-க்கு 6 மாத சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. சவுக்கத் அலிக்கும் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர் இருவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மலோத்து கவிதா எம்.பி. மேல்முறையீடு செய்ய இருப்பதாகக் கூறியுள்ளார். தேர்தலில் பணப் பட்டுவாடா செய்ததற்காக, முதன்முதலாக, பெண் எம்.பி.,க்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








